Crime: உத்தர பிரதேசத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, ரயில் முன் கொடூர கும்பல் தூக்கி வீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.  குறிப்பாக வடமாநிலங்களில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:


உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாலட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில்,  நேற்று 17 வயது சிறுமி டியூஷன் முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, இரண்டு பேர் சிறுமியை வழிமறித்து பேசியுள்ளனர். பின்னர்,  சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்ததாக தெரிகிறது. இதனை சிறுமி தடுக்க முயன்றுள்ளார். அப்போதும் கூட அந்த கும்பல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரிகிறது. 


தொடர்ந்து தடுத்து கொண்டிருந்த சிறுமியை, அந்த கும்பல் ரயிலின் முன்பு தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.  சிறுமி ரத்த வெள்ளத்தில் தண்டவாளத்தில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


கை, கால்கள் பறிப்போன கொடூரம்:


இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ”உடல் நிலை மோசமாக இருப்பதால், மேல் சிசிக்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ரயில்முன் தூக்கி வீசப்பட்டதால் சிறுமியின் கை, கால்கள் பறிப்போனது.  சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என்றனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது வரை ஒருவர் மட்டும் கைதான நிலையில், 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் அலட்சியமாக இருந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், சிறுமியின் மருத்துவ செலவையும் அரசே ஏற்கும் என்று தெரிவித்துள்ளார். பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க முயன்றபோது, சிறுமி ரயில்முன் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.