பாலியல் வன்முறைக்கு ஆளான சிறுமி ஒருவர் தப்பிப்பதற்காக ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
மகாராஷ்டிரா, அவுரங்காபாத்தில் பாலியல் வன்முறையிலிருந்து தப்பிப்பதற்காக, வேகமாக சென்று கொண்டிருந்த ஆட்டோவில் இருந்து 17 வயது சிறுமி ஒருவர் குதித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முன்னதாக டியூஷன் சென்று ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்த சிறுமியிடம் ஆட்டோ ஓட்டுநர் பேச்சு கொடுக்கத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து படிப்படியாக அவரை பயமுறுத்தும் வகையில் ஆபாசமாக அவரிடம் பேசத் தொடங்கியுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஓட்டுநரின் பேச்சு எல்லைமீறிய நிலையில், அச்சத்தில் செய்வதறியாது சட்டென ஓடிக் கொண்டிருந்த ஆட்டோவில் இருந்து சிறுமி குதித்துள்ளார்.
கீழே விழுந்த சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், பாதசாரிகள் விரைந்து சென்று அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் அவரை அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், நகரில் பொருத்தப்பட்டிருந்த 40 சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் சையத் அக்பர் ஹமீது எனும் இந்த ஆட்டோ ஓட்டுநரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
மும்பையில் வசித்து வரும் சையத் அக்பர் ஹமீது எனும் இந்த ஆட்டோ ஓட்டுநர் ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் அவுரங்காபாத் சென்று ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்து ஓட்டத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஆட்டோவிலிருந்து சிறுமி குதித்த தருணம் அருகிலிருந்த கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்த நிலையில், இக்காட்சி வெளியானது.
சிறுமி விழுந்த வேகத்தில் பின்னே வந்துகொண்டிருந்த காரிடமிருந்து நூலிழையில் தப்பியுள்ள நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
போக்சோ சட்டம் :
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.
18 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக இந்த போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் குறித்த தகவல்கள் பின்வருமாறு:
- Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
- Aggravated penetrative sexual assault - தீவிரமான பாலியல் தாக்குதல்
- Sexual Assault - பாலியல் தொல்லை
- Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
- Sexual Harassment - பாலியல் தொந்தரவு
- Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்
இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றன.
- 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை
- இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
- 12 வயதுக்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது).