அமெரிக்காவில் காணாமல் போன சிறுமி ஒருவர் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்.
நியூயார்க் நகரைச் சேர்ந்ஹ சிறுமி பெய்ஸ்லி ஷல்டிஸ். இவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் காணாமால் போனார். அப்போதே போலீஸார் ஷல்டிஸை அவளது பெற்றோரே கிம்பர்லி கூப்பர் 33, கிர்க் ஷல்டிஸ் 32 ஆகியோரே கடத்தியிருக்கலாம் என சந்தேகப்பட்டனர். ஏனெனில் அவர்கள் குழந்தையைப் பெற்றிருந்தாலும் சில சிக்கலால் அவர்களுக்கு குழந்தையை வளர்க்க சட்டப்பூர்வ அனுமதியில்லை.
ஆனால் கிர்க், கிம்பர்லி தம்பதியிடம் குழந்தை இல்லை. இதனால் போலீஸார் அந்தத் தம்பதியை கண்காணித்துக் கொண்டே இருந்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் குழந்தை ஷல்டிஸ் பற்றி போலீஸுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸார் வீட்டை சோதனை செய்ய வாரண்ட் வாங்கி குழந்தையின் தாத்தா பாட்டி வீட்டை சோதனை செய்தனர்.
அப்போது குழந்தையை ஒரு படிகட்டின் கீழ் ரகசிய இடத்தில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸார் சந்தேகத்தின் பேரில் படிக்கட்டு பலகைகளை அகற்றிய போது அங்கே குழந்தையும் அதன் தாய் கிம்பர்ளியும் இருந்தனர். குழந்தை பெய்ஸி ஷெல்டியை போலீஸார் காவல்துறை தலைமையகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
குழந்தை ஆரோக்கியமாக இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். குழந்தை மீது சட்டப்பூர்வ உரிமை இல்லாத நிலையில் அந்தக் குழந்தையை கடத்தி வைத்திருந்ததாக கிர்க், கிம்பர்ளி தம்பதி மற்றும் குழந்தையின் தாத்தா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
விமர்சிக்கும் நெட்டிசன்கள்:
குழந்தை இரண்டாண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கட்டதையும், அந்தக் குழந்தை ஒரு படிக்கட்டின் கீழ் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததையும் அதை டிடெக்டிவ் ஒருவர் கண்டுபிடித்ததாகவும் பரபரப்பாக செய்திகளை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எதற்காக குழந்தை அதன் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டது என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால், பரபரப்பை கிளப்பிவிட்டு தகவல்களை சொல்வது என்ன மாதிரியான இதழியல் என்று விமர்சித்து வருகின்றனர்.