தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று மாலையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் நின்று கொண்டிருந்த போது அய்யனேரியை சேர்ந்த கார்த்திக் (19) மது போதையில் மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாணவர்கள் அனைவரும் இணைந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அடிக்க முயன்றதால் கார்த்திக் அங்கு சென்று இருந்து சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் கார்த்திக் அவரது நண்பர்களுடன் தன்னை அடிக்க வந்த மாணவர்களை தேடி வந்து உள்ளார். அப்போது அந்த மாணவர்கள் அங்கு இல்லை என்பதால் , அதே கல்லூரியில் படிக்கும் கடலையூரைச் சேர்ந்த வைரமுத்து (19), என்பவர் நின்று கொண்டிருந்தார். கார்த்திக் தலைமையில் அந்த குழு , மாணவனை பிடித்து மிரட்டியது மட்டுமின்றி, கையில் கொண்டு வந்த அரிவாளால் வைரமுத்துவை தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். வைரமுத்துவின் கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து வைரமுத்து கோவில்பட்டி மேற்கு கவனத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த கார்த்தி என்ற அட்டுக் கார்த்தி (19), சின்னமணி (24), அய்யநேரியை சேர்ந்த கார்த்திக் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கல்லூரி மாணவனை அரிவாளால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் கைதாகி உள்ள கார்த்தி என்ற அட்டு கார்த்தி மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் தினமும் காலை மாலை வேளைகளில் அதிக அளவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் வருவது வழக்கம். அவ்வாறு வருவதில் சில மாணவர்கள் கும்பல் கும்பலாக நின்று பெண்களை கேலி செய்வதும், பஸ் படிக்கட்டில் தொங்கி செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த நேரத்தில் கூடுதலாக காவல்துறையினரை நியமித்து கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் இல்லை என்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும், அது மட்டுமின்றி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பஸ் நிலையத்தில் அதிகளவில் கஞ்சாவும் விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதால், போலீசார் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.