நாட்றம்பள்ளி அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.80 ஆயிரத்தை ஆட்டைய போட்ட டிப்டாப் ஆசாமியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த சின்னசாமி தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் இவரது மனைவி  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ராணி(60). இவர் சொர்க்காயல் நத்தம் அடுத்த கந்தன் நகர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார்.

 

இவர் தனது வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 67 ஆயிரம்  இருப்பு வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி தனது வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்து மினி ஸ்டேட்மெண்ட் எடுக்க நாட்டறம்பள்ளியில் உள்ள SBI ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார்.

 

அப்போது அங்கு டிப்டாப்பாக இருந்த  நபர்  ஒருவர் நான் ஸ்டேட்மெண்ட் எடுத்து தருகிறேன் என்று தலைமையாசிரியையிடம்  கேட்டுள்ளார். அவர் வங்கி ஊழியர் என நினைத்து அவரிடம் தனது ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார்.

 

அந்த நபர் அந்த கார்டை முதலில் உள்ள ஒரு எந்திரத்தில் கார்டு போட்டு அது வேலை செய்யவில்லை என கூறி பக்கத்தில் உள்ள மற்றொரு  எந்திரத்தில் கார்டு போட்டு ஸ்டேட்மெண்ட் எடுத்து ரசீதை  கொடுத்துவிட்டு தலைமையாசிரியரின்  கார்டை எடுத்து பக்கெட்டில் போட்டுகொண்டு தன்னிடம் இருந்த கோகிலா என்ற பெயரில் உள்ள ஏடிஎம் கார்டை  கொடுத்து அங்கிருந்து தலைமறைவானார்.

 

பின்னர் தலைமை ஆசிரியரின் செல்போனுக்கு ரூ.40 ஆயிரம் என இரண்டு முறை ரூ.80 ஆயிரம் வங்கிக்கணக்கிலிருந்து  எடுக்க பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.

 

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் ஏடிஎம் மையத்திற்கு சென்று தன்னிடம் உள்ள ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பாக்கி தொகையை சரி பார்க்க முயன்ற போது தன்னிடம்  உள்ளது போலியான ஏடிஎம் கார்டு என்பதை அறிந்த அவர் வங்கிக்கு சென்று தந்து ஏடிஎம் கார்டை பிளாக் செய்துள்ளார். இதுதொடர்பாக நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.