கர்நாடகா மாநிலத்தில் கேஸ் கசிவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமையல் எரிவாயு எனப்படும் கேஸ் சிலிண்டர்கள் இன்றைக்கு 99 சதவிகித வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சற்று கவனக்குறைவு ஏற்பட்டாலும் ஆபத்தை விளைவிக்ககூடிய கேஸ் சிலிண்டரால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது வழக்கம். எனவே தினசரி சேவை தொடங்கும்போது, இரவு முடிக்கும்போது சிலிண்டர், கேஸ் அடுப்பு ஆகியவற்றை சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் கர்நாடகாவில் கேஸ் கசிவால் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மைசூரு டவுணில் உள்ள யரஹனஹள்ளி பகுதியில் குமாரசாமி என்பவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், அர்ச்சனா, சுவாதி என இரு மகள்களும் இருந்தனர். குமாரசாமி மற்றும் மஞ்சுளா இருவரும் சலவை தொழில் செய்து வந்தனர்.
இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் குமாரசாமி குடும்பத்தினருடன் சிக்மங்களூரில் இருந்து மைசூருக்கு குடியேறினர். சில தினங்களுக்கு முன்பு உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேக்க சிக்மங்களூர் சென்ற குடும்பத்தினர் நேற்று முன்தினம் காலை மைசூரு திரும்பியுள்ளனர். அன்று வழக்கம்போல பகலில் வேலை பார்த்த அவர்கள் இரவில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளனர். இதனிடையே நேற்று காலை நீண்ட நேரமாகியும் குமாரசாமி வீட்டு கதவு திறக்கப்படவில்லை.
அப்போது அங்கு அர்ச்சனா மற்றும் சுவாதியின் தோழி ஒருவர் வந்துள்ளார். அவர் கதவை தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் வந்து தட்டியும் கதவை திறக்காததால் உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். அப்போது படுக்கையறையில் குமாரசாமி, மஞ்சுளா, அர்ச்சனா, சுவாதி 4 பேரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். மேலும் அவர்கள் வீட்டில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டதற்கான அறிகுறியும் காணப்பட்டது.
உடனடியாக மக்கள் ஆலஹனபள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மைசூரு போலீஸ் கமிஷனர் ரமேஷ் மற்றும் ஆலஹனபள்ளி காவல்துறையினர் 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மைசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு நடத்தியதில் கேஸ் கசிவு ஏற்பட்டதில் மூச்சுத்திணறி அனைவரும் உயிரிழந்ததை உறுதி செய்தனர். வீட்டில் 3 சிலிண்டர்கள் இருந்த நிலையில் ஒன்றில் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.