போலி அடையாள அட்டையை காட்டி ஊரை ஏமாற்றி வந்த முன்னாள் காவலர் கைது...!

’’ஏற்கனவே காவல்துறையில் பணியாற்றி ஒழுங்கீனமான நடவடிக்கைக்காக கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டவர்  என்பதும் தெரிந்தது. கட்டாய ஓய்வு கொடுத்த பின்னரும் பலரை மிரட்டியது தெரியவந்தது’’

Continues below advertisement
குளச்சலில் ஓசியில் கார் ரிப்பேர் பார்ப்பதற்காக டுபாக்கூர் அடையாள அட்டைகளை காட்டி, மிரட்டிய முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் குளச்சல் பனவிளையை சேர்ந்தவர் ராஜன் (39). இவர் குளச்சலில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம், இவரது ஒர்க் ஷாப்புக்கு வந்த நபர், தான் குளச்சல் டி.எஸ்.பி. அலுவலகத்தில் குற்றப்பிரிவு எஸ்.ஐ. ஆக இருப்பதாகவும், தனது காரில் டிஸ்க் சரி செய்ய வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து ஊழியர்கள் சரி செய்த பின்னர், அதற்கான பணம் கொடுக்காமல் காரில் செல்ல முயன்றார்.
 
அப்போது ஒர்க் ஷாப் ஊழியர்கள் மறித்து பணம் கேட்டனர். நான் காவல் துறையில் பணியில் உள்ளேன். என்னிடமே பணம் கேட்கிறாயா? என கேட்டு ஊழியர்களை அந்த நபர் மிரட்டினார். இதனால் ஊழியர்கள், ஒர்க் ஷாப் உரிமையாளர் ராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்த போது, சம்பந்தப்பட்ட நபர் ஏற்கனவே 2 முறை இதே பாணியில் காரில் பழுது நீக்கி விட்டு போலீஸ் என கூறி பணம் கொடுக்காமல் சென்றவர் என்பது தெரிந்தது. உடனடியாக இது குறித்து குளச்சல் காவல் நிலையத்துக்கு ராஜன் தகவல் கொடுத்தார்.
 
இதையடுத்து குளச்சல் போலீசார் வந்து, சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மண்டைக்காடு அருகே உள்ள அழகன்பாறை காட்டுவிளையை சேர்ந்த சேகர் (53) என்பதும், ஏற்கனவே காவல்துறையில் பணியாற்றி ஒழுங்கீனமான நடவடிக்கைக்காக கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டவர்  என்பதும் தெரிந்தது.
 
கட்டாய ஓய்வு கொடுத்த அனுப்பிய பின்னரும், தமிழ்நாடு காவல்துறை அடையாள அட்டை, அரசு போக்குவரத்து கழக தொழில் நுட்ப பிரிவில் பணியாற்றுவதாக அடையாள அட்டை ஆகியவற்றை போலியாக தயாரித்து வைத்து கொண்டு அப்பகுதியில் உள்ள கடைகளில் ஓசியில் பொருட்களை வாங்கிவிட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் மிரட்டியதும், பல்வேறு இடங்களில் இதே பாணியில் பணம் கொடுக்காமல் பொருட்களை வாங்கி  சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து தற்போது ராஜன் புகாரின் பேரில், முன்னாள் போலீஸ்காரரான சேகர் மீது ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
 
போலி அடையாள அட்டைகளை காட்டி அப்பாவி வணிகர்களை மிரட்டி பணம் பறிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிக அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola