விழுப்புரம்: நில மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து புகார் அளித்ததால் சென்னையைச் சேர்ந்த மாநகராட்சி திமுக தொழிற்சங்க நிர்வாகியை கொலை செய்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே புதைக்கப்பட்ட உடலை தோண்டி மருத்துவ குழு உடற்கூறுஆய்வு செய்தனர். 

முன்னாள் திமுக எம்பி உதவியாளர் கொலை

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (71). இவர் முன்னாள் திமுக எம்பி குப்புசாமியிடம் உதவியாளராக பணியாற்றியதோடு, மாநகராட்சி திமுக தொழிற்சங்க நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் திமுக தொழிற்சங்க நிர்வாகி குமார், கடந்த 16ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர், சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
இதனைத்தொடர்ந்து தாம்பரம் காவல்துறை உதவி ஆணையர் நெல்சன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காணாமல் போன குமார் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது உறவினருக்கு சொந்தமாக உத்தண்டியில் உள்ள ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் ரவி என்பவர் மோசடி செய்துள்ளதாக காவல் நிலையத்தில் குமார் புகார் கொடுத்திருப்பதும்,

மலை பகுதியில் குழி தோண்டி புதைப்பு

இதனால் ஆத்திரமடைந்த ரவி தலைமையிலான கும்பல், குமாரை காரில் கடத்தி சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல் ஓலக்கூரில் குழித்தோண்டி குமாரின் உடலை புதைத்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ரவி, செந்தில்குமார், விஜய் உள்ளிட்ட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டனர். 
 
இதனைத்தொடர்ந்து குமாரை காரில் கடத்தி சென்று கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதற்காக கைது செய்யப்பட்ட 3 பேரில் ஒருவரான ரவி என்ற முக்கிய குற்றவாளியை மட்டும் அழைத்து கொண்டு தாம்பரம் தனிப்படை போலீசார், சம்பவ இடமான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல் ஒலக்கூர் என்ற இடத்திற்கு நேற்று மாலை வருகை தந்தனர்.
 
அப்போது மேல் ஒலக்கூர் கன்னிமார் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள காட்டு பகுதியில் குமாரின் உடல் புதைக்கப்பட்டிருக்கும் இடத்தை ரவி அடையாளம் காட்டினான். அப்போது இரவு நேரமாகி இருள் சூழ்ந்துவிட்டதால் புதைக்கப்பட்ட குமாரின் உடலை தோண்டி வெளியே எடுக்கும் பணி ஒத்தி வைக்கப்பட்டது.  
 
இதனைத்தொடர்ந்து மேல் ஓலக்கூர் கன்னிமார் கோயில் மலை அடிவாரத்தில் புதைக்கப்பட்டிருந்த குமாரின் உடலை தோண்டி வெளியே எடுப்பதற்கான பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தாம்பரம் தனிப்படை போலீசார் மற்றும் செஞ்சி வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் புதைக்கப்பட்ட குமாரின் உடல் தோண்டி வெளியே எடுக்கப்பட்டது. வெளியே எடுக்கப்பட்ட குமாரின் உடலை அங்கேயே வைத்து உடற்கூராய்வு செய்து பின்னர் குமாரின் உடலை சென்னைக்கு கொண்டு சென்றனர்.
 
இந்த சம்பவத்தில் குற்றவாளி ரவிக்கு சொந்த ஊர் மேல் ஒலக்கூர் என்றும் இதன் காரணமாகவே காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட குமாரை, இங்கு கொண்டு வந்து புதைத்திருப்பதும் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.