கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் தொற்று பரவலுக்கு ஏற்றவாறு மாவட்டங்களுக்கு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டு, குறிப்பிட்ட சில கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக தொற்று அதிகமாக காணப்படும் 11 மாவட்டங்களில் அரசு மதுபான கடையான டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுவிற்கு அடிமையான மது பிரியர்கள், மது போதைக்கு மது கிடைக்காமல் தங்களை போதையில் வைத்துக்கொள்ள பல்வேறு மாற்று வழிகளை தேடி வருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்ட சமூக விரோதிகள் பல இடங்களில் கள்ளச்சாராயம் தயார் செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மது போதைக்கு அடிமையான சிலர் பெயிண்டில் கலக்கப்படும் தின்னர் என்ற வேதிப்பொருளில் எலுமிச்சைப்பழத்தை பிழிந்து குடித்து உயிர் இழந்த சம்பவமும் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்தேறி உள்ளது.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என பல கள்ளச்சாராய கும்பலை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் ஆங்காங்கே கைது செய்யும் சம்பவங்களும் நடந்தேறி வருகிறது. இருப்பினும் காவல்துறை கண்களில் மண்ணைத் தூவும் விதமாக கள்ளச்சாராய விற்பனை மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்கதையாக நடந்து வருகிறது. மேலும் பெரும்பாலான கள்ளச்சாராயம், பதுக்கல்களும் தயாரிப்பதும் வனத்துறை பகுதிகளில் நடைபெற்று வருவதும் வழக்கமாக உள்ள நிலையில், வனத்துறை காவலர்கள் அவர்களிடம் மது வாங்கி கொண்டு இதனை கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டிவரும் சூழலில், அதற்கு உதாரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தென்பாதியில் நகர் பகுதியில் குடியிருப்புகள் மத்தியில் இயங்கி வரும் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் சிலர் இரவு வேளையில் அலுவலகத்தில் மது அருந்திவிட்டு அவர்களுக்குள் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதை தொடர்கதையாக வைத்துள்ளனர். அவ்வாறு நேற்றிரவு அங்கு பணியாற்றும் வனக் காப்பாளராக பணியாற்றி வரும்  நடேசன் அலுவலகத்தை பாதுகாக்க இரவு பணிக்கு வந்துள்ளார். 




இரவு பணிக்கு வந்த நடேசனிடம்  சக வனகாவலர்கள் முத்துகிருஷ்ணன்,கலையரசன்,துளசிமலை ஆகியோர் தேக்கு மரம் காணாமல் போனதாக கூறி வாக்குவாதம் செய்தனர். இதில் வாக்குவாதம் முற்றி அலுவலகத்தை விட்டு சாலையில் வந்து அருவருக்கத்தக்க வார்த்தையில் பேசி சண்டையிட்டுள்ளனர். இதனை அறிந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் இந்த காட்சிகளை தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த. வனக்காலர் நடேசன் கையில் கத்தியுடன் விரட்டியதுடன், கற்களை வீசியும் தாக்க முயன்றுள்ளார். இதில் செய்தியாளர் அதிஷ்டவசமாக தப்பினார். இதனையடுத்து சக வனகாவலர்கள் இனைந்து செய்தியாளரை மிரட்டியதுடன் தரக்குறைவாகவும் பேசியுள்ளனர். நாள்தோறும் இவர்கள் குடிபோதையில் சன்டையிடுவதும் கேள்வி கேட்கும் அக்கம்பக்கத்தினரை மிரட்டுவதும் தொடர்கதையாக உள்ளது என அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த சீர்காழி போலீசார் போதை வனக்காவலர்களை எச்சரித்து அப்புறப்படுத்தினர்.




மேலும் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் திறக்கப்படாத சூழலில் வனத்துறை ஊழியர்களுக்கு எவ்வாறு மது கிடைத்தது, கள்ளச்சந்தையில் வனப்பகுதிகளில் மது பதுக்கலில் ஈடுபடுபவர்களுக்கு  இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என காவல்துறையினர் உரிய விசாரணை இவர்களிடம் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.