துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணி ஒருவர் பெட்டியில் சேலைக்குள் மறைத்துவைத்து ரூ.4.10 கோடி மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டுவந்தபோது பிடிபட்டார்.


துபாயில் இருந்து மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு நவம்பர் 2ஆம் தேதியன்று ஒரு விமானம் வந்தது. ஃப்ளைதுபாய் விமான நிறுவனத்தின் FZ-446  என்ற அந்த விமானத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பயணித்தனர். அவர்களின் உடைமைகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது ஒரு பையில் டாலர்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 4,97,000 அமெரிக்க டாலர்கள் அதில் இருந்தன. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் அவற்றின் மதிப்பு ரூ.4.10 கோடி ஆகும். விமானநிலைய நுண்ணறிவு குழுவிற்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டுவந்தவர்களில் இருவர் வயதானவர்கள்.






பையில் சோதனை நடத்தியதோடு அவர்களை முழு உடல் சோதனைக்கும் உட்படுத்தியபோது அதில் ஒருவரின் ஷூவுக்குள்ளும் டாலர்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் இன்னொரு பெட்டியிலும் பதுக்கி வைத்திருந்தனர். மூவரும் கைது செய்யப்பட்டனர். மூவரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. சோதனை நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


ஹவாலா பணம் கடத்தல்:


விமானங்களில் போதைப் பொருள், தங்கம் அடுத்தப்படியாக வெளிநாட்டுப் பணம் கடத்தலே பிரதானமாக இருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மற்றும் ரூ.262.05 கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் ரூ.70.12 கோடி மதிப்பில் 157.75 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மொத்தம் 234 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 144 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பெண்கள் 20 சதவீதம் அடங்குவர் என குறிப்பிடத்தக்கது. தங்க கட்டிகளை கெட்டியான பசையாக மாற்றி, பிளாஸ்டிக் கவர், பெண்களின் கூந்தல், உள்ளாடைகள் மற்றும் ஆசனவாய்களில் பதுக்கி வைத்து தங்க பசையை கடத்தி வருகின்றனர். 


சென்னை விமானநிலையத்தில் இருந்து வெளிநாட்டு பணம், கணக்கில் வராத ஹவாலா பணம் கடத்தலும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 36 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.10.42 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை தவிர மின்னணு சாதன பொருட்கள், வெளிநாட்டு சிகரெட், நட்சத்திர ஆமை, அரியவகை விலங்குகள், பழங்கால சிலைகள், கடல்வாழ் உயிரினங்கள் கடத்தலும் அடிக்கடி நடக்கின்றன என்று புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.