நாடுகடத்தப்பட்ட நபர்களுக்கு கைரேகை அறுவைசிகிச்சை செய்து மீண்டும் அதே நாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவைக்கும் நூதன ஏமாற்று வேலை நடந்துள்ளது. தெலங்கானா போலீஸார் தான் இந்த ஏமாற்று வேலையைக் கண்டுபிடித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் மல்காகிரி ஸ்பெஷல் ஆபரேஷன்ஸ் பிரிவு போலீஸாரும், கடேசர் காவல்துறையினரும் சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் இந்த அசரவைக்கும் நூதன மோசடி அம்பலமானது.
அண்ணாஜிகுட்டா பகுதியில் ஹேப்பி ரெஸிடன்ஸி என்ற விடுதியில் போலீஸார் ரெய்டு நடத்தினர். அப்போது ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த 4 பேர் சிக்கினர். அவர்கள் 4 பேரையும் கைது செய்தபோது போலீஸார் கைரேகை அறுவை சிகிச்சை என்ற நூதன மோசடி குறித்து அறிந்திருக்கவில்லை. இது சர்வதேச அளவில் விரியும் பெரிய மோசடி வலை என்பதையும் உணரவில்லை. ஆனால் சந்தேகத்தின் பேரில் கைதான 4 பேரிடமும் விசாரிக்க விசாரிக்க குற்றப்பின்னணி போலீஸாரையே அதிர வைத்தது.
அந்த 4 பேருமே கைரேகை அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக வந்திருந்ததும் தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்படி கைரேகையை ஏற்கெனவே மாற்றி அறுவை சிகிச்சை செய்த இருவரின் தகவலும் கிடைத்தது. இது தொடர்பாக நாக முனேஸ்வர ரெட்டி என்ற ரேடியாலஜிஸ்டும், வெங்கட் ரமணா என்ற அனஸ்தீஸியா டெக்னீசியனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் திருப்பதியில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அறுவை சிகிச்சை செய்துகொண்ட இருவரின் ஒருவர் பெயர் சிவ சங்கர ரெட்டி (25), இன்னொருவர் பெயர் ராம கிருஷ்ணா ரெட்டி (38).
திடுக்கிடும் தகவல்கள்:
கைது செய்யப்பட்ட இருவரும் சொன்ன தகவல்களைக் கேட்டு போலீஸாரே திகைத்துப் போயுள்ளனராம். இருவரும் இதுவரை கைரேகையை மாற்ற 11 அறுவை சிகிச்சைகள் செய்துள்ளனராம். ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் ரூ.25,000 செலவு பிடிக்குமாம். இப்படியாக அறுவை சிகிச்சை செய்து கைரேகையை மாற்றி இதுவரை மூன்று பேர் குவைத்துக்கு சென்றுவிட்டனர் என்பது தான் கூடுதல் அதிர்ச்சி தகவல். குவைத் சென்ற மூவருமே ஏற்கெனவே இதுபோன்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தான். கைதானவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராஜஸ்தான், கேரளா மாநிலங்களிலும் விசாரணை விரிவடைந்துள்ளது.
எப்படி செய்யப்படுகிறது இந்த அறுவை சிகிச்சை?
இதற்காக விரல் நுணியின் மேல்பகுதி தோல் திசுவை நீக்கி மீண்டும் தையல் போடுகின்றனர். ஓரிரு மாதங்களில் காயம் ஆறி கைரேகையில் சிற்சில மாற்றங்கள் ஏற்படுத்துமாம். இது ஒருவருடம் வரை மாறுபட்ட கைரேகையைக் காட்டுமாம்.
குவைத் குடியுரிமையேற்று அலுவலகத்தில் கைரேகையைக் கண்டறியும் தொழில்நுட்பம் இன்னும் மேம்படுத்தப்படவில்லை என்பதை அறிந்தே இதுபோன்ற அறுவைசிகிச்சைகளை செய்து நூதன மோசடியில் ஈடுபடுகின்றனராம்.
இந்த கைரேகை மாற்று அறுவை சிகிச்சையை செய்த பின்னர் புதிதாக புது முகவரியும் ஆதாருக்கு விண்ணபித்தும் பெறுகின்றனர். பின்னர் குவைத்துக்கு புதிதாக விசா பெற்று செல்கின்றனர் என்று விவரித்தார் ரச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் பகவத்.
கைதான நான்கு பேர் மீதும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 420, 467, 468, 472, 475, 109 ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுதவிர ஐபிசி .40, 42 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.