சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் மாணவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அவரது தந்தையும் தற்கொலை செய்துக் கொண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உயிரை பறிக்கும் நீட்:


இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு முறை அமலில் இருந்து வருகிறது. மருத்துவம் படிக்க விரும்புபவர்கள் இந்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய தேர்வு முகமை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு நடக்கும்போதெல்லாம் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பும். அதேசமயம் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் போதெல்லாம் தோல்வியடைந்த கவலையில் மாணவர்கள் தற்கொலை செய்து வருவது தொடர்கதையாகவே உள்ளது. 


நீட் தேர்வுக்கு ஆதரவு ஒருபக்கம் இருக்கும் பட்சத்தில்,  தமிழ்நாட்டில் அதிகளவில் எதிர்ப்பும் உள்ளது. காரணம் இந்த  தேர்வால் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவு கனவாக மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு நீட் தேர்வுக்கு எதிரான நிலையிலேயே உள்ளது. நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம்  பொதுப்பட்டியலில் இருப்பதால் அந்த கோப்பு குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


மாணவர் தற்கொலை:


சில தினங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நீட் விலக்கு மசோதா பற்றி கேள்வியெழுப்பப்பட்டதற்கு, அந்த கோப்பில் நான் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி. தெரிவித்தது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இந்த நிகழ்வு நடைபெற்று ஒருநாள் கடந்த நிலையில், நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 


சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த செல்வசேகர் என்பவர் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருடைய மகன் ஜெகதீஸ்வரன்(19), இரண்டு முறை நீட் தேர்வு எழுதி 200க்கும் குறைவான மதிப்பெண் எடுத்து தோல்வியடைந்துள்ளார். இதனால் மிகுந்த மன வருத்ததுடன் இருந்ததாக கூறப்படுகிறது. நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றும் பலனலளிக்காத நிலையில் மீண்டும் நீட் பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வகுப்பிற்கு செல்லாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தந்தை தற்கொலை:


இந்த சம்பவம் தொடர்பாக  சிட்லபாக்கம் போலீசார் ஜெகதீஸ்வரன் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் செல்வம், மகனும் இறந்து விட்டதால் துக்கம் தாங்காமல் ஜெகதீஸ்வரன் தந்தை செல்வம் தeற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 


Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)