தஞ்சை அருகே மகளுடன் படித்து வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுகை செய்த அதிமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் பள்ளிக்கூடம் இல்லாத காரணத்தினால் மாணவிகள் வீட்டிலேயே இருக்கும் சூழல் உருவாகியுள்ளது, குறிப்பாக பெற்றோர்கள் வேலைக்கு செல்வதால் பெண் குழந்தைகள் அதிக அளவில் வீடுகளில் தனிமையில் இருந்து வருகிறார்கள்.
இதனை பயன்படுத்திக் கொண்டு சில நபர்கள் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பது தொடர்கதையாகி வருகிறது. மேலும் காவல் நிலையங்களில் கடந்த சில மாதங்களாக போக்சோ வழக்குகள் அதிக அளவில் பதிவாகி வருகின்றன. என காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்புடன் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை அருகில் உள்ள மாரியம்மன் கோவில் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38). இவர் தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறை தலைவராக உள்ளார். இவருடைய மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார் . அதே பள்ளியில் அவருடன் அதே பகுதியை சேர்ந்த 15 வயதான மற்றொரு மாணவியும் படித்து வந்துள்ளார் . இந்நிலையில் வேல்முருகன் அவருடைய மகளின் தோழிக்கு அவர் மகள் அனுப்புவதை போல தொடர்ந்து வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்.
இந்நிலையில் வேல்முருகன் அந்த மாணவியின் வீட்டிற்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து சென்றுள்ளார். தொடர்ந்து அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த மாணவி வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீஸார் வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் கூறும் பொழுது.. கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சிகிச்சைக்கு பெற்றோர்கள் அழைத்து வரும் சம்பவம் அதிகமாகி வருகிறது. பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளிடம் பெண் குழந்தைகளின் உடலில் தொடுதல் குறித்த விழிப்புணர்வுகளை அதிகம் சொல்லித்தர வேண்டும். தங்களிடம் மற்றவர்கள் தவறாக நடந்து கொண்டால் அதை உடனடியாக பெற்றோர்களிடம் தெரிவிக்க குழந்தைகளிடம் அறிவுறுத்தல் வேண்டும். அப்படி செய்தால் தான் இது போன்ற சம்பவங்கள் குறையக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.