தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் பார்க்கிங் பகுதியில், நிறுத்தாமல் பொது இடத்தில் நிறுத்தும் இருசக்கர வாகனங்களை மட்டுமே குறிவைத்து திருடுவேன் என பகீர் வாக்குமூலம் அளித்த பிரபல இருசக்கர வாகன திருடன்.
தொடர் இருசக்கர வாகன திருட்டு
தாம்பரம் மாநகர காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக அந்தந்த காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாக உள்ளது. இதனால் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டதின் பேரில் சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் பரணிதரன் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணையில் இறங்கினர்.
டி.வி.எஸ் ஸ்கூட்டி
இதையடுத்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒரே நபர் பல்வேறு இடங்களில் (டிவிஎஸ் ஸ்கூட்டி) இரு சக்கர வாகனங்களை திருடிக் கொண்டு கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிக்கு கொண்டுசெல்வது தெரியவந்தது,
இதையடுத்து அந்த மர்ம நபர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் மேலும் நேற்று அதிகாலை ஊரப்பாக்கம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக (ஸ்கூட்டி)இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர்.
காட்டிக்கொடுத்த சிசிடிவி
அப்போது தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹரிகரன்(60) என தெரியவந்தது, மேலும் ஏற்கனவே சிசிடிவி காட்சிகளில் பார்த்த முதியவரும் இருவரும் ஒரே நபர் போல் இருப்பதால் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் கடந்த இரண்டரை மாதங்களில் தாம்பரம் மற்றும் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற பகுதிகளில், இருசக்கர வாகனம் பார்க்கிங் இடங்களில் நிறுத்தாமல் பொது இடங்களில் நிறுத்தும் வாகனங்களை மட்டும் குறி வைத்து கள்ளச்சாவி மூலம் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியதாக அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வாகனங்கள் பறிமுதல்
மேலும் ஹரிகரன் திருடிய இருசக்கர வாகனங்களை திருவண்ணாமலை மற்றும் வந்தவாசி ஆகிய இடத்திற்கு கொண்டு சென்று கிராமப் பகுதிகளில் சாதாரண வியாபாரிகளிடமும், பால் வியாபாரிகளிடமும் வாகன எண்ணெய் மாற்றி குறைந்த விலைக்கு ஏமாற்றி விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஹரிகரன் விற்பனை செய்த ஒன்பது இரு சக்கர வாகனங்களையும் அவர் வசித்து வந்த ஊரப்பாக்கம் வாடகை வீட்டில் இருந்து ஐந்து இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 14 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் ஹரிகரன் கடந்த 10 வருடத்திற்கு மேலாக சூளைமேடு, சைதாப்பேட்டை, மாம்பலம், மயிலாப்பூர், சேலையூர், செங்கல்பட்டு ஆகிய காவல் நிலையங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட (ஸ்கூட்டி) போன்ற இரு சக்கர வாகனங்களை திருடி சிறைக்குச் சென்று வந்ததும் தெரியவந்துள்ளது.
சிறையில் அடைப்பு
மேலும் ஹரிஹரன் மீது சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு உண்டான பார்க்கிங் பகுதியில் மட்டுமே நிறுத்த வேண்டும் எனவும் பொது இடத்தில் நிறுத்த வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.