சென்னை திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி மணிகண்டன் என்ற குள்ளமணி. 32 வயதானவர். சில மாதங்களுக்கு முன் அங்குள்ள சுனாமி புதிய குடியிருப்பு பகுதியில் வசிக்கும் திருநங்கை ஒருவருக்கும், மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு மோதலாக மாற, ஆத்திரமடைந்த குள்ளமணி, திருநங்கையின் பாட்டியை கத்தியால் வெட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திருநங்கையின் உறவினரான மாரிமுத்து என்பவர் தண்டையார்பேட்டை போலீசாருக்கு புகார் செய்துள்ளார்.




அந்த புகாரின் பேரில் குள்ளமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறைவாசத்திற்குப் பின் வெளியே ஜாமீனில் வெளியே வந்த குள்ளமணி, தன்னை போலீசில் பிடித்துக் கொடுத்த மாரிமுத்துவை பழிவாங்க திட்டமிட்டார். இதற்காக அவரது குடும்பத்தாரையே தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். திட்டமிட்டபடி பெட்ரோல் குண்டு ஒன்றை தயார் செய்து, மாரிமுத்து வசித்த வீட்டை தேடிப்பிடித்து அங்கு பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். வீட்டின் கதவில் தீப்பற்றியதால் அங்கிருந்து குள்ளமணி தப்பியோடினார். 


பெட்ரோல் குண்டுவீச்சில் மாரிமுத்து கதை முடிந்து போயிருக்கும் என நினைத்திருந்த குள்ளமணிக்கு மறுநாள் பேரதிர்ச்சி காத்திருந்தது. அதே தண்டையார் பேட்டை போலீசார் மீண்டும் குள்ளமணியை தேடி வந்தனர். இந்த முறை நினைத்ததை முடித்த லட்சியத்தோடு சிறைக்குச் செல்ல தயாரானார் குள்ளமணி. ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது, லட்சியம் நிறைவேறவில்லை, தன் லட்சணம் தான் தெரியவந்தது என்று. 





தான் வசித்து வந்த வீட்டிலிருந்து மாரிமுத்து காலி செய்து வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். இந்த விபரம் தெரியாமல், யாரோ ஒருவர் சொன்ன அடையாளத்தை எடுத்துக் கொண்டு வேறொருவர் வசிக்கும் வீட்டில் குள்ளமணி பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. சென்னை தண்டையார் பேட்டை கைலாச முதலி தெரு சுனாமி புதிய குடியிருப்பில் உள்ள அந்த வீட்டில், ஓய்வு பெற்ற சென்னை துறைமுக ஊழியரான ரூபகாந்தன் என்பவர் தான் வசித்து வந்துள்ளார். 


72 வயதான அவர், தன் மனைவி ஜெயலட்சுமியுடன் வசித்துவந்த நிலையில், திடீரென பெட்ரோல் குண்டு வீசப்பட்டு கதவி தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் அளித்த தகவலின் பேரில் தான் மீண்டும் குள்ளமணி கைது செய்யப்பட்டார். நல்வாய்ப்பாக இந்த குண்டுவீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குள்ளமணியின் அத்தனை பிளான்களும் நமத்து போன பட்டாசாக மாறியதும், மீண்டும் வந்த இடத்திற்கே திரும்ப அடைக்கப்பட்டது தான் நடந்தது. பிரபல ரவுடிக்கு நேர்ந்த இந்த ‛நான் அப்டேட்’ சம்பவம், சக ரவுடிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண