காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கம் இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செண்பகவல்லி மற்றும் 2 மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் செண்பகவல்லி மற்றும் அவர்களின் உறவினர்கள் சேர்ந்து, தன் தங்கை லாவண்யாவிற்கு ஜோசப் என்பவரை கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
லாவண்யா- ஜோசப் தம்பதிக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில் இரண்டாவது குழந்தை பிரசவத்தின் பொழுது,அதீத ரத்தப் போக்கின் காரணமாக இரண்டு வருடங்களுக்கு முன் லாவண்யா உயிரிழந்துள்ளார்.
இதனால் பிறந்த கைக்குழந்தை மற்றும் 4 வயது குழந்தையுடன் ஜோசப் செண்பகவல்லின் வீட்டு மாடியில் தங்கியிருந்துள்ளார். அப்போது ஜோசப்பும் செண்பகவல்லிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் தவறான உறவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜோசப்புக்கு அதே பகுதியை சேர்ந்த அமிர்தா என்ற பெண்ணுடன் கடந்த ஒரு வருடகாலமாக பழக்கம் ஏற்பட்டது. இதனால் செண்பகவல்லிக்கும் ஜோசப்புக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் செண்பகவல்லி அவருக்கும் ஏற்பட்ட தகராறின் முடிவில், வீடியோ ஒன்றை பதிவிட்டு அதை தனது கணவருக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கணவர் பொன்னுரங்கம் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சோமங்கலம் போலீசார், உடலை கைப்பற்றி குரோம்பேட்டை மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் சோமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தன் மனைவி தற்கொலைக்கு காரணம் ஜோசப் என்றும் தன்னை அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாவும், தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறியதைத் தொடர்ந்து அவரது கணவர் பொன்னுரங்கம் அளித்த புகாரின் பேரில், சோமங்கலம் காவல்துறையினர் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் , தற்கொலை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஜோசப்பை இன்று கைது செய்தனர்.
உயிர் இறப்பிற்கு முன் செண்பகவல்லி உருக்கமாக பேசிய வீடியோவில், என் தந்தையோ அல்லது என்னை கட்டிய கணவரோ, என்னை அடித்து துன்புறுத்தவில்லை, ஆனால் உன்னை நம்பி வந்ததற்கு என்னை அடைத்து சித்திரவதை செய்தாய். மேலும் நான் உயிரிழக்க இருப்பதால் என் பிள்ளைகள் தாய் இல்லாமல் தவிப்பார்கள் என் குடும்பத்தைச் ஜோசப் கெடுத்து விட்டார் என உருக்கமாக பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050