சமூக ஊடகங்களான வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது என்பது சவாலான காரியமாக மாறி வருகிறது. பல்வேறு சைபர் வழி குற்றச்செயல்கள் நடைபெறுவதால், உஷாராக இருக்க வேண்டும் என காவல்துறையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சைபர் கிரைம் பிரச்சனையால், பொதுமக்கள் மட்டுமின்றி அரசுத்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலதரப்பு மக்களும், இதனால் பாதிப்படைந்து வருகின்றனர். 

Continues below advertisement

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி whatsapp

செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆட்சியராக D.சினேகா பணியாற்றி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா பொறுப்பேற்றுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ்அப் உருவாக்கப்பட்ட இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த போலி வாட்ஸ்அப் கணக்கு குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் சினேகா, உடனடியாக தனது வழக்கமான வாட்ஸ்அப் கணக்கில் இதுதொடர்பான விழிப்புணர்வு செய்தியை ஸ்டேட்டஸாக வைத்து பொதுமக்களை எச்சரித்துள்ளார். பொதுமக்கள் இந்த போலி கணக்கினால் ஏமாற வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சரியான தொடர்பு எண்களை மட்டுமே பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

மாவட்ட ஆட்சியர் பெயரிலேயே தைரியமாக போலி கணக்குத் துவங்கி, அவரது புகைப்படத்தை புரொஃபைல் பிக்ச்சராக வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் செங்கல்பட்டு மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டும்? 

1. முதல் கட்டமாக நீங்கள் போலி கணக்கு குறித்த ஆதாரங்களை சேமிக்க வேண்டும். ஸ்க்ரீன் ஷாட்கள் எடுக்க வேண்டும், முகநூல் போன்றவற்றில் போலி கணக்குகள் துவங்கினால் அந்த லிங்கை காப்பி செய்து வைத்துக் கொள்ளவும். இவையெல்லாம் பின்னர் சைபர் கிரைம் போலீசுக்கு புகார் அளிக்கும் போது, தேவைப்படும். 

2. உடனடியாக சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு புகார் அளியுங்கள், வாட்ஸ்அப் என்றால் வாட்ஸ் அப்பில் அந்த எண்ணை புகார் செய்யுங்கள். பேஸ்புக் போன்ற சமூக வலைதளம் என்றால் அதில் புகார் அளியுங்கள். ( "Find support or Report Profile" அல்லது "Report" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.).

3.வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் போலி எண்ணிலிருந்து வந்தால் உடனடியாக அந்த கணக்கை ரிப்போர்ட் செய்துவிடவும். அதற்கு முன்னால் அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சம்பந்தப்பட்ட whatsapp எண்களை, நோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

4. தகுந்த ஆதாரங்களுடன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளியுங்கள். சைபர் கிரைம் வெப்சைட்டில், நேரடியாக சென்று புகார் அளிக்கலாம். 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உடனடியாக புகார் அளிக்கலாம். தேவை என்றால் நேரடியாக சென்று கூட சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கலாம்.

5. உங்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு உடனடியாக இதுகுறித்து தகவலை தெரிவித்து விடுங்கள். ஏனென்றால் உங்கள் பெயரை பயன்படுத்தி அவர்கள் மோசடியில் சிக்காமல் தடுக்க முடியும்.

6. உங்களுக்கு சம்பந்தப்பட்ட போலி கணக்குகளில் இருந்து மிரட்டல் வந்தால், எக்காரணம் கொண்டும் பதற்றம் அடையாமல் ஆதாரத்தை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.