விழுப்புரம் : கோலியனூரில் உள்ள புத்துவாயம்மன் கோயிலில் ஆறு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போலி சாமியாரை அப்பகுதியினர் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் நகர பகுதியான அன்னாநகரை சார்ந்த ரமேஷ் என்பவர் கோலியனூரில் உள்ள புத்துவாயம்மன் கோவிலில் தினந்தோறும் மாலை நேரங்களில் காவி உடையில் சாமியார் போன்று சாமி தரிசனம் செய்ய வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அப்படி கோவிலுக்கு வரும்போதெல்லாம் கோவிலுக்கு வரும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை ரமேஷ் வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு ரமேஷ் வழக்கம்போல் புத்துவாயம்மன் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த ஆறு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. உடனே, சிறுமி தனது பெற்றோரிடத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சாமியார் வேடமணிந்து சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அவரை தர்ம அடி கொடுத்து வளவனூர் போலீசாரிடம் ஒப்படைதுள்ளனர். கோவிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போலி சாமியாரை கோவிலுக்கு வந்தவர்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.