தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் போலி இ-மெயில் உருவாக்கி அவதூறு பரப்பியதாக மர்மநபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மர்ம நபர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். 


தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பெயரில் போலி மின்னஞ்சல் ஆரம்பித்து அவதூறு பரப்புவதாக சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கூறியிருந்தார். போலி மின்னஞ்சலை தொடங்கி அதன் மூலம், மூஸ்லீம்களை அவதூறாக பேசியுள்ளதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.


இந்த நிலையில்,  தமிழக நிதி அமைச்சரின்பேரில் போலி மின்னஞ்சல் ஆரம்பித்து அதன்மூலம், முஸ்லீம்களை அவதூறாக பேசியுள்ளதாக தெரியவந்த வந்த தகவலின்பேரில் நடவடிக்கை எடுக்குமாறு அளித்த புகாரின்பேரில் E4 PS Cr No: 736/21 U/s 465, 467, r/w 34 IPC & 500, 153(A),295(A) IPC & 66D IT Act, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.


தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிடவுள்ள நிலையில், அவரின் பெயரில் போலி மின்னஞ்சலை தொடங்கி அவதூறு பரப்பியுள்ளனர்.




கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. 120 பக்கங்களைக் கொண்ட வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் வெளியிடுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்த நிலையில் திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுகிறது. வருவாய் இழப்பிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும். மேலும், கடன் விவரங்கள், குடிநீர், மின்வாரியம், போக்குவரத்து துறையின் வரவு - செலவு மற்றும் வருவாய் இழப்புக்கான காரணங்கள் உள்ளிட்டவை வெள்ளையறிக்கையில் வெளியாகும். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2001இல் அதிமுக ஆட்சியில் பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் பொன்னையன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


வெள்ளை அறிக்கை என்றால் என்ன?


வெள்ளை அறிக்கை என்ற பெயர் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். வெள்ளை அறிக்கை என்பது ஒரு ஜனநாயக கருவி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளை அறிக்கையை அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் வெளியிட முடியாது.


வெள்ளை அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றியோ அல்லது பிரச்னைகள் பற்றியோ முழுமையாக தெரிவிக்கும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இந்த ஆவணத்தில் குறிப்பிட்ட சிக்கல் குறித்தோ அல்லது பொருள் குறித்தோ நிபுணரின் தீர்வும் பரிந்துரையும் கொண்டதாக இருக்கும். ஒரு சிக்கலை புரிந்து கொள்ளவோ, சிக்கலை தீர்க்கவோ, அல்லது முடிவெடுக்கவோ வெள்ளை அறிக்கை வழிவகை செய்கிறது


இந்த ஆவணத்தின் வெளிப்புற பக்கங்கள் வெள்ளை நிறத்தால் இருக்கும் என்பதால் இதற்கு வெள்ளை அறிக்கை என பெயர் வந்தது.