முகநூலில் தன் உறவினர்கள் தான் தன்னை ஏமாற்றுகிறார்கள் என்று தெரியாமல் காதல்வசப்பட்ட ரேஷ்மா என்ற பெண், பெற்றெடுத்த குழந்தையை ரப்பர் தோட்டத்தில் வீசிச்சென்ற சம்பவம் கேரளத்தில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இதோடு ரேஷ்மாவினை ப்ராங்க் செய்த இரு பெண்களும் தற்கொலை செய்துகொண்டனர்.


சமுகவலைத்தளங்களை முறையாகப் பயன்படுத்தினால் பல்வேறு புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். ஆனால் அதனைக் கையாளும் விதம் தவறாக மாறும் பொழுதுதான் தேவையில்லாத உயிரிழப்புகளும், அவப்பெயரும் ஏற்படுகின்றது. குறிப்பாக முகநூலில் எந்தப் பெயரிலும் ஒரு அக்கவுன்ட ஒபன் செய்து யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் முகநூலில் தமக்கு தெரிந்தவர்களாக இருந்தால்  நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அதே வேறு யாரேனும் நண்பர்கள் ஆகினால் அவர்கள் ஆணா அல்லது பெண்ணா? என்பதைக்கூட நம்மால் அறிய முடியாது. அப்படி தான் கேரள மாநிலத்தைச்சேர்ந்த ரேஷ்மா என்ற பெண், தனக்கு முகநூலில் நட்பு வேண்டுகோள் விடுத்தது உறவுக்காரப் பெண் எனத் தெரியாமல் காதல் வசப்படுகிறார்.. இதுவே  அவரது இல்லற வாழ்க்கையைப் பாதித்ததோடு கொலையாளியாகவும் மாற்றிவிட்டது. என்ன நடந்தது? போலீசார் எப்படி கண்டறிந்தனர்?


கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கல்லுவாதுக்கல் பகுதியைச்சேர்ந்தவர் தான் ரேஷ்மா. இவருடைய கணவர் விஷ்ணு என்பவர் வளைகுடா நாட்டில் பணிபுரிந்துவருவதால், ரேஷ்மா மற்றும் அவரது குழந்தையுடன் தனியாக  வசித்து வருகிறார். இந்நிலையில் ரேஷ்மா மீண்டும் கருத்தரிக்கிறார். இந்த மகிழ்ச்சியான செய்தியினை தனது கணவரிடம் சொல்ல வேண்டும் என்று ஆசையாக இருந்தப்பொழுது தான் முகநூல் நண்பர்கள் இவருக்கு அறிமுகம் ஆனார்கள். யாரும் நம்மிடம் இல்லாத நேரத்தில் வரும் புதிய நட்பின் மீது அளவுக்கடந்த பாசம் ஏற்படும். அப்படித்தான் தன்னுடைய முகநூல் பக்கத்திற்கு வந்த ஆண் நட்பின் வேண்டுகோளை ஏற்று பேச ஆரம்பித்துள்ளார் ரேஷ்மா.



ஆனால் தன்னுடைய உறவினர்கள் தான் தன்னை ஏமாற்றுகிறார்கள் என தெரியாமல் ஜாலியாக பேசி வந்த நிலையில், முகநூல் நட்புடன் காதல் வசப்படுகிறார் ரேஷ்மா. தான் பேசும் நபரிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக, தனக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது எனவும், மற்றொரு குழந்தையினை வயிற்றில் சுமந்து வருவதாகவும் கூறியுள்ளார். உடனே ரேஷ்மாவின் முகநூல் காதலன், “ஒரு குழந்தையுடன் மட்டும் வந்தால் மட்டுமே உன்னை ஏற்றுக்கொள்ள முடியும்“ என  சொல்லியிருக்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில்தான், தன்னுடைய புதிய வாழ்க்கைக்காக, தான் கருவுற்றிருந்த தகவலை கணவர் விஷ்ணு மற்றும் அவரது உறவினர்கள் யாரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். இறுதியில் குழந்தையினை வீட்டில் பெற்றெடுத்ததோடு, யாருக்கும் தெரியமால் ரப்பர் தோட்டத்தில் வீசி எறிந்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.  தன்னுடைய முகநூல் காதலனுடன் புதிய வாழ்க்கையினை தொடரப்போகிறோம் என்ற நிலையில் இருந்தபோதுதான் ரப்பர் தோட்டத்தில் குழந்தை ஒன்று இருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பச்சிளம் குழந்தையினை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தை சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துவிட்டது.


இதன்பின்னர், யாருடைய குழந்தை? யார் குழந்தையை ரப்பர் தோட்டத்தில் தூக்கி வீசியிருப்பார்கள் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்காக அப்பகுதியில் இருந்த இளம்பெண்கள் பலருக்கும் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது. இதில் ரேஷ்மா தான் அக்குழந்தையின் தாய் எனக் கண்டறியப்பட்டது.  இதனையடுத்து கடந்த 22-ஆம் தேதி ரேஷ்மாவினை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தினர். அப்பொழுது தான், தன்னுடைய முகநூலில் ஏற்பட்ட காதல் விவகாரங்களை ரேஷ்மா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.



இதனையடுத்து யார் ரேஷ்மாவுடன் முகநூலில் பேசியிருப்பார்கள் என சைபர் கிரைம் உதவியுடன் போலீஸார் துப்புதுலக்கிய போதுதான், அது அவரது உறவினர்களான 23 வயதான ஆர்யா மற்றும் 22 வயதான கரீஷ்மா  என்ற இரு பெண்கள் என தெரியவந்துள்ளது. மேலும் ரேஷ்மாவினை ப்ராங்க் செய்வதற்காக இப்படி நாடகமாடியுள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில்தான் போலீசார் தங்களை நெருங்குதை அறிந்து பயந்த ஆர்யா மற்றும் கரீஷ்மா ஆகிய இருவரும் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். முகநூலில் உறவுக்கார பெண்ணினை ப்ராங்க் செய்வதற்காக தொடங்கிய இந்த விவகாரம் பச்சிளம் குழந்தை உட்பட மூன்று பேரின் உயிர்களைப் பறித்தது கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.