சென்னையில் போலீஸ் என கூறி ஆந்திர நகை வியாபாரியிடம் ரூ.1.40 கோடி வழிப்பறி செய்த சம்பவத்தில் ரூ.70 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளது. 


ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நகை வியாபாரியான சுப்பாராவ் என்பவர் அடிக்கடி சென்னை வந்து சௌகார்பேட்டையில் உள்ள வியாபாரிகளிடம் நகை வாங்கி செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாலை தனது மேனேஜர் ரகுமான் என்பவரை அழைத்துக் கொண்டு நகை வாங்க ரூ.1.40 கோடி பணத்துடன் தனியார் பேருந்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வந்திறங்கியுள்ளார்.


பின்னர் அங்கிருந்து ஆட்டோ ஒன்றில் சௌகார்பேட்டை நோக்கி சென்றார். வழியில் யானைக்கவுனி துளசிங்கம் தெரு - வீரப்பன்தெரு சந்திப்பில் ஆட்டோ சென்றபோது இவர்களை பின் தொடர்ந்து வந்த கார் முந்திச் சென்று வழி மறித்துள்ளது. இதில் இருந்து டிப்டாப் ஆக உடையணிந்த 3 இளைஞர்கள் இறங்கியுள்ளனர். அவர்கள் சுப்பாராவிடம் சென்று தாங்கள் போலீசார் என்றும், எங்களுக்கு உங்கள் மீது சந்தேகம் உள்ளது. அதனால் சோதனையிட வேண்டும் என கூறியுள்ளனர். 


அப்படியே சுப்பாராவ் வைத்திருந்த கைப்பையையில் அவர் கொண்டு வந்த ரூ.1.40 கோடி பணம் இருப்பது தெரிய வந்தது. உடனே இதற்கான ஆவணம்,ரசீது உள்ளிட்டவற்றை மூவரும் கேட்டுள்ளனர். இது என்னுடைய பணம், நான் நகை வாங்க வந்துள்ளேன் என கூறியும் இளைஞர்கள் கேட்கவில்லை.  மேலும் அவர்கள் லத்தி, கைவிலங்கு எல்லாம் வைத்திருந்ததைக் கண்டு போலீஸ் தான் என சுப்பாராவ், அவரது மேனேஜர் நம்பியுள்ளனர். 


ஆனால் திடீரென சுப்பாராவ் மற்றும் அவரது மேனேஜர்  இருவரையும் அந்த இளைஞர்கள் தாக்கி விட்டு தப்பிச்சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பாராவ் யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். 


இதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன் இம்ரான் என தெரிய வந்தது. இந்நிலையில் இம்ரானை இன்றைய தினம் கைது செய்துள்ள போலீசார் அவரிடமிருந்து ரூ.70 லட்சத்தை கைப்பற்றியுள்ளனர்.