பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைபடுவார் என இசைஞானி இளையராஜா எழுதிய முன்னுரை வரிகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் சமூகவலைதளங்களில் பேசுபொருளானது. மேலும், ஒரு சிலர் இளையராஜா மத்திய அரசு வழங்கும் எம்.பி பதவிக்கு ஆசைப்பட்டுதான் அம்பேத்கரையும், மோடியையும் ஒன்றாக இணைத்து பேசினார் என்று கருத்து தெரிவித்து வந்தனர். பலர் இளையராஜாவின் சொந்த கருத்தை விமர்சிக்க ஒருவருக்கும் உரிமையில்லை. இது கருத்துரிமைக்கு எதிரான அச்சுறுத்தல் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


ஒரு புறம் ஒரு சிலர் இசைஞானி இளையராஜாவிற்கு ஆதரவாகவும், ஒரு சிலர் அவருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வரும் வேளையில், இவையெல்லாம் குறித்து எதையும் கவலை படாமல் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி படத்தில் வரும் நான் உன்னை நீங்கமாட்டேன் பாடலை பாடி வெளியிட்டுள்ளார். தற்போது, அதை அவரது ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். 






அந்த பதிவில், "நான் உன்னை நீங்க மாட்டேன். நீங்கினால் தூங்க மாட்டேன்" என்று பாடி, சேர்ந்திடு என் ஜீவனே என்னும் வரிகளுக்கு பதிலாக, "உனக்காகவே... இந்த நாள் நன்னாள் என்று பாடு... என்னதான் இன்னும் உண்டு கூறு" என்று மாற்றி பாடியுள்ளார். 


முன்னதாக, இதுகுறித்து பேசிய இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், "அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என இளையராஜா கூறினார். தனக்கு எதிரான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதாகவும் என்னிடம் இளையராஜா கூறினார். மற்றவர்கள் எப்படி கருத்து கூறுகிறார்களோ அதேபோல்தான் கருத்தைக் கூறினேன் என்றார். தான் பதவி வாங்குவதற்காக மோடியை புகழவில்லை. தான் கட்சிக்காரர் இல்லை என்றும் கூறினார். அம்பேத்கரையும் பிடிக்கும், மோடியையும் பிடிக்கும். அதனால் ஒப்பிட்டு பேசினேன் என்று இளையராஜா கூறினார்” என்று தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண