கன்னியாகுமரி அருகே மனைவி, குழந்தைகளை வீட்டை விட்டு விரட்டி விட்டு, மற்றொரு பெண்ணை வீட்டுக்கு ராணுவ வீரர் அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தனது மனைவி மற்று 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இவரது 2 மகன்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாகவும், மற்றொருவர் மன நோயாளியாகவும் உள்ளனர். அந்த முன்னாள் ராணுவ வீரர் தேன் சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார். இது லாபகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது உள்ள வீட்டின் அருகே புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். 


இதுதொடர்பாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த அந்த நபருக்கு மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் தனது 3 பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த அப்பெண்ணுடன் முன்னாள் ராணுவ வீரரின் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் வீட்டுக்கு வருவதை குறைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி ரகசியமாக விசாரித்ததில் கணவருக்கும், மார்த்தாண்டம் பெண்ணுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரிய வந்தது. 


இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால் மார்த்தாண்டம் பெண்ணுடன் தான் இருப்பேன் என முன்னாள் ராணுவ வீரர் உறுதியாக கூறியுள்ளார். குழந்தைகளுக்காக பிரச்சினையை கைவிட்ட மனைவிக்கு மறுநாளே அதிர்ச்சி கொடுத்துள்ளார் கணவர். அந்த மார்த்தாண்டம் பெண்ணுடன் வீட்டுக்கு வந்த அவர், தனது அறைக்குள் அழைத்து சென்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தார். 


சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அறையின் கதவை தட்டி முன்னாள் ராணுவ வீரரை வெளியே அழைத்துள்ளனர். ஆனால் துப்பாக்கியுடன் வந்த அவர் போலீசாரை மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரிடம் நைசாக பேசி துப்பாக்கியை வாங்கிய போலீசார் அதன் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைத்தனர். இதனால் அதிருப்தியான முன்னாள் ராணுவ வீரர் தான் ஒழுங்காக இருப்பேன் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 


ஆனால் 2 நாட்களில் மீண்டும் தன் வேலையை காட்டியுள்ளார். அந்த மார்த்தாண்டம் பெண்ணை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கும் இடையே தகராறு வெடித்துள்ளது. இதில் மனைவி, 2 மாற்றுத்திறனாளி மகன்களை வீட்டை விட்டு முன்னாள் ராணுவ வீரர் துரத்தியுள்ளார்.  இதனை அக்கம் பக்கத்தினர் கண்டித்தும் அந்த நபர் கேட்பதாக இல்லை. இதனையடுத்து மீண்டும் திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 


அவர்கள் வந்து கதவை உடைத்து முன்னாள் ராணுவ வீரர், மார்த்தாண்டம் பெண் இருவரையும் அழைத்து காவல் நிலையம் கூட்டிச் சென்று விசாரணை நடத்தினர். அங்கே சமாதானமாக போவதாக சொல்லிவிட்டு அடுத்த 2 நாட்களில் அப்பெண்ணை மீண்டும் அழைத்து வந்தார் முன்னாள் ராணுவ வீரர். இதனை கண்டித்த அக்கம் பக்கத்தினருக்கும் அவருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது. மீண்டும் அங்கு வந்த போலீசார் இனி இப்படி நடந்தால் சிறையில் அடைப்போம் என எச்சரித்தனர். அவர் தற்போது புதிதாக கட்டி வரும் வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.