இங்கிலாந்தில் 7 குழந்தைகளை கொடூரமாக கொன்ற செவிலியருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து மான்செஸ்டர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 


கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  முதல் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில் இங்கிலாந்து நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆஃப் செஸ்டர் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கு மாறாக அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவங்கள் நடைபெற்றது. அதேசமயம் சில குழந்தைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவது என நடந்த சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த மருத்துவமனையில் லூசி லெட்பி என்ற செவிலியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட அந்த செவிலியர் குழந்தைகள் மரணம் அதிகரித்த நேரத்தில் பணியாற்றி வந்ததன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இதனை மருத்துவமனை நிர்வாகமும் உறுதிப்படுத்திய நிலையில், அவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் குழந்தைகளின் சிகிச்சையின் போது பயன்படுத்த மருத்துவ குறிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.


இதனையடுத்து லூசி லெட்பி 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, அவர் மீது  மான்செஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நோய்வாய்ப்பட்ட மற்றும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக பால் கொடுத்தும், இன்சுலினுடன் விஷத்தை ஏற்றியும், குழந்தைகளுக்கு இரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் காற்றை செலுத்தியும் 7 குழந்தைகளை கொன்றார். மேலும்  6 குழந்தைகளை கொலை செய்ய முயன்றதாகவும் லூசி லெட்பி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. விசாரணையின் முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை குற்றவாளி என நேற்று முன்தினம் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.


இதனைத் தொடர்ந்து தண்டனைக்கான வாதம் இன்று நடைபெற்றது. இதன் முடிவில் குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக செவிலியர் லூசி லெட்பி மிகவும் கொடூரமான குற்றங்களை செய்திருப்பார். எனவே அவர் ஆயுள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினர். அவர் எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் லூசி லெட்பிக்கு முன்பாக 3 பெண்ணுக்கு மட்டுமே வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.