வன விலங்குகளின் தோல் மற்றும் அதன் உடல் பாகங்களை திருடி விற்பனை செய்வது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனால் அரிய வகை உயிரினங்கள் எல்லாம் இதற்காகவே சட்ட விரோதமாக வேட்டையாடப்படுகின்றது. இந்த வேட்டையாட படக்கூடிய பொருட்களை அழகு காட்சி பொருள்களாக மிகப்பெரிய பங்களாக்களிலும் வசதி வாய்ப்பு உடையவர்களும் வைக்க பெரும் பணம் படைத்தவர்கள் விரும்புவதால் யானை தந்தம், புலி தோல் மற்றும் மான் கொம்புகள் போன்ற வனவிலங்குகளை வேட்டையாடுவது தொடர்கதையாக உள்ளது. இதுபோன்று சட்டவிரோதமாக வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 39), நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் வயது (38). இதில், சதீஷ்குமார் ஏற்கனவே வன விலங்குகள் தொடர்பான பொருட்களை விற்பனை செய்து சிறையில் இருந்துள்ளார்.
அதன் அடிப்படையில், சதீஷ்குமாரின் செல்போன் எண்ணை சென்னை வனத்துறையினர் கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் சதீஷ்குமாரிடம் யானைத் தந்தம் உள்ளதாகவும் அதை அவர் விற்க முயன்று வருவதும் சென்னை வனத்துறையிறனருக்கு தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்ட வனத்துறையினர். சதீஷ்குமாரின் செல்ஃபோன் எண்ணை தொடர்பு கொண்டு யானை தந்தத்தை விலைக்கு வாங்குவது போல் பேரம் பேசியுள்ளனர். அப்போது தான் வேலூரில் இருப்பதாகவும், வேலூர் வந்து யானைத்தந்தத்தை பெற்று கொள்ளுமாறு சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சென்னையில் இருந்து வந்த வனத்துறை அதிகாரிகள் வேலூர் வனத்துறையினருடன் இணைந்து சதீஷ்குமாரை பிடிக்க திட்டம் தீட்டினார். அதன் அடிப்படையில், வேலூர் அடுத்த சாத்துமதுரை பகுதியில் இருப்பதாக சதீஷ்குமாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
யானை தந்தத்தை விற்க சாத்துமதுரைக்கு காரில் வந்த சதீஷ்குமாரிடம் சாதாரண உடைகள் இருந்த வனத்துறையினர் யானை தந்தத்தை வாங்குவது போல் 23 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசியுள்ளனர். யானை தந்ததை காரில் இருந்து வெளியே எடுத்தபோது மறைந்திருந்த வனத்துறை குழுவினர் சதீஷ்குமாரையும் அவரோடு இருந்த ஜெயக்குமாரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 16 கிலோ எடை கொண்ட ஒரு யானை தண்டத்தையும், காரையும் பறிமுதல் செய்தனர். பின்பு இருவரையும் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1- ல் ஆஜர்ப்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இவர்கள் இருவரும் பல்வேறு மாவட்டங்களில் யானைத் தந்தத்தை விற்க்க விலை பேசி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது