விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வட ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருக்கு 5 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சுதாகர் என்பவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுதாகர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து ரோசனை பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், முருகன் ஆகிய 2 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

 



 

இதை அடுத்து காவல் துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரங்கநாதனின் மற்றொரு மகனான வழக்கறிஞர் குமார் (42) என்பவர், சொத்துக்காக தனது அண்ணனை கொலை செய்ய சொன்னதாகவும், மேலும் இதற்காக தங்களுக்கு பணம் தருவதாகவும் கூறியதாக வாக்குமூலம் அளித்தனர். 

 



 

இந்த நிலையில் இது குறித்து அறிந்த குமார் கடலூர் மத்திய சிறையில் இருக்கும் ஜெயக்குமாருக்கும், முருகனுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தான் தருவதாக கூறிய பணத்தையும் தர முடியாது என்று கூறி உள்ளார். இதை அடுத்து ஜெயகுமார், வழக்கறிஞர் குமார் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கடிதம் எழுதி வைத்து விட்டு, கடலூர் மத்திய சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. இதனை அடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குமாரை வலைவீசி தேடி வந்தனர். 

 



 

இந்த நிலையில் குமார் நேற்று திண்டிவனம் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சிபிசிஐடி கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் காவல் துறையினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் திண்டிவனம் பகுதிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.