நடுரோட்டில் குடி போதையில் ராணுவ அதிகாரியின் வாகனத்தை தடுத்து நிறுத்தி தகராறு செய்த மாடல் அழகியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியரில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ட்விட்டரில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் ஹை ஹீல்ஸ், அல்ட்ரா மாடர்ன் ட்ரெஸ் எனக் காட்சியளிக்கிறார். தள்ளாடி தள்ளாடி நடக்கும் அவர் நடுரோட்டில் ராணுவ வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்துகிறார். அந்த வாகனத்தில் இருந்த ராணுவ அதிகாரி இளம் பெண்ணை விலகிச் செல்லுமாறு கூறுகிறார். அவரோ கண்டபடி வசைபாடிக் கொண்டு ராணுவ வாகனத்தின் முகப்பை மிதிக்கிறார். ஒருமுறை அல்ல பலமுறை அவர் இதேபோன்று செய்கிறார். இதனால் ராணுவ அதிகாரி பொறுமை இழந்து கீழே இறங்கிவந்து அந்தப் பெண்ணை விலகிச் செல்லுமாறு கூறுகிறார். ஆனாலும் அந்தப் பெண் விவாதங்களை விடவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் அந்தப் பெண் போதையில் தள்ளாடி வேறு பக்கம் நகர ராணுவ வாகனம் கிடைத்த கேப்பில் விர்ரென்று புறப்பட்டுச் செல்கிறது.
அதற்குள் அங்குள்ள பொதுமக்களில் யாரோ போலீஸில் புகார் கூற சம்பவ இடத்துக்குக் காவல்துறையினரும் வந்து விடுகின்றனர். அவர்கள் அந்த இளம் பெண்ணை அழைத்துச் சென்றனர். அந்தப் பெண்ணை பரிசோதனை செய்ததில் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திய இருந்ததும் தெரிய வந்தது. அந்தப் பெண் மீது சுங்கச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் வெளியே விடப்பட்டார்.
இந்தச் சம்பவம் இணையத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், இணையவாசிகள் எனப் பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் கார்கி ராவத், அதிர்ச்சியளிக்கும் நடத்தை. இந்தப் பெண்ணுக்கு ராணுவ வாகனத்தை தாக்கும் துணிச்சல் எங்கிருந்து வந்தது? எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளதோடு, இத்தகைய செய்கையில் ஈடுபட்ட பெண்ணுக்கு நிச்சயமாக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் இது போன்ற பொறுப்பற்ற இளைஞர்கள் இளம் பெண்கள் இதை ஒரு சாகசம் போல் செய்யத் தொடங்கிவிடுவார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
மது குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பதாகும். இளம் சமுதாயத்தின் போதை மீதான ஈர்ப்பு இந்தியாவில் ஒரு புதிய பிரச்னையாகவே உருவெடுத்து வருகிறது என்றே கூற வேண்டும் என கவலை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.