நவம்பர் 26, 2008. மும்பையில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தானில் இருந்து நுழைந்த நபர்களால் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டு, அதற்கடுத்த 3 நாள்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. `26/11’ என்றழைக்கப்படும் இந்தத் தாக்குதலில் 174 பேர் பலியாகினர். 26/11 சம்பவத்தைப் பற்றி பல்வேறு திரைப்படங்கள், சீரிஸ் முதலான படைப்புகள் வெளிவந்திருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள ‘மும்பை டைரீஸ் 26/11’ இந்த நிகழ்வை வேறொரு தளத்தில் இருந்து அணுகுகிறது. இதற்குமுன் வெளிவந்த படைப்புகளில் காவல்துறை, ராணுவம் ஆகியவற்றின் வீரம், தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டு தேசபக்தி பெருக்கெடுத்து ஓடுவது போன்ற காட்சிகள் முதலானவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தன. 26/11 சம்பவத்தை அரசு மருத்துவமனை ஒன்றோடு இணைத்து புனைவுக் கதையாக மாற்றி, மும்பை நகரத்திற்குச் சமர்ப்பணம் செய்துள்ளது படக்குழு.


எப்போதும் பரபரப்பாக இருக்கும் அரசு மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டிற்கு, துப்பாக்கிச் சூட்டால் காயம்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் காவல்துறையினரும், தீவிரவாதிகளும் தூக்கிவரப்பட்ட பிறகு என்ன நிகழும் என்ற கேள்வியின் அடிப்படையில் கற்பனையாக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த சீரிஸ். எட்டு எபிசோட்களைக் கொண்டுள்ள இந்த சீரிஸில் பல்வேறு கதாபாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். மனைவியோடு நேரம் செலவு செய்ய முடியாமல், திருமண உறவை முறிக்கும் நிலையில் இருக்கும் தலைமை மருத்துவர் கௌஷிக், பிரபல மருத்துவரான தனது அப்பாவின் நிழலில் இருந்து வெளியேற முயன்று கொண்டிருக்கும் பயிற்சி மருத்துவர் தியா, மோசமான கடந்த காலத்தில் இருந்து மீள முடியாமல், நோயாளிகளிடம் அன்பைக் காட்டும் மருத்துவமனையின் இயக்குநர் சித்ரா, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து மருத்துவராக மாறினாலும், வாழ்க்கை முழுவதும் சாதிய வன்கொடுமையின் சுவடுகளை அனுபவிக்கும் பயிற்சி மருத்துவர் சுஜாதா, தீவிரவாதிகளும் தன் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக சந்தேகப் பார்வையால் துளைக்கப்படும் பயிற்சி மருத்துவர் அஹான், தனது செய்தி சேகரிப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லத் துணியும் செய்தியாளர் மான்சி முதலான பல கதாபாத்திரங்களின் கதைகள் ஒட்டுமொத்த தொடருக்கு வலுசேர்க்கின்றன. 



சுமார் 70 மணி நேரம் நிகழ்ந்தவற்றை எட்டு எபிசோட்களாக மாற்றி, பரபரப்பாக உருவாகியுள்ளது ‘மும்பை டைரீஸ் 26/11’. தொடக்க காட்சிகளில் மெதுவாகத் தொடங்கும் திரைக்கதை, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி மருத்துவமனையை எட்டியவுடன் வேகம் எடுக்கத் தொடங்குகிறது. இடையிடையே சில இடங்களில் கதாபாத்திரங்களின் எண்ணவோட்டத்தை நமக்கு உணர்த்த சற்று தொய்வடைந்தாலும், கதையின் போக்கில் இருக்கும் வேகம் நம்மை சீட்டின் நுனியில் அமரச் செய்து ரசிக்க வைக்கிறது. மும்பை அரசு மருத்துவமனை என்று உருவாக்கப்பட்டிருக்கும் செட் உண்மையான மருத்துவமனையைப் போலவே அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சீரிஸின் கலை இயக்குநர் விஜய் கோட்கே அதிகளவில் பாராட்டுக்குரியவர். ஒரு மருத்துவமனையின் சூழலை அப்படியே நகலெடுத்துள்ள விஜய் கோட்கேவின் கலை இயக்கத்திற்கு வலுசேர்த்திருக்கிறது நிகில் அத்வானி மற்றும் நிகில் கோன்சால்வேஸ் ஆகியோரின் திரை இயக்கம். 


`மும்பை டைரீஸ் 26/11’ சீரிஸின் பலமாக இருப்பது அதன் தேர்ந்த நடிகர்கள். கௌஷிக்காக வரும் மோஹித் ராய்னா மிகச்சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறார். கொங்கனா சென் ஷர்மா, டினா தேசாய், பிரகாஷ் பெலவாடி முதலான முக்கிய நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். 



26/11 தாக்குதல் குறித்து இந்திய அரசு கூறும் தகவல்களும், இதுகுறித்து ஆய்வுசெய்த சில பத்திரிகையாளர்களின் தகவல்களும் பல்வேறு முரண்களைக் கொண்டுள்ளவை. மேலும், மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரேவைப் போல ஒரு காவல்துறை அதிகாரியின் மரணமும் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஹேமந்த் கர்கரேவின் மரணம் இன்றுவரை தீர்க்கப்படாத மர்மமாகவே இருக்கின்றன. மேலும், மும்பை தாக்குதல் மீதான விசாரணை ஆணையங்களின் பணி, நீதித்துறையின் மெத்தனம் என அரசு தரப்பில் இன்றுவரை விடை தெரியாத கேள்விகள் இருக்கின்றன. இப்படியான சூழலில், கடந்த காலத்தில் சர்ச்சைகளால் நிரம்பிய நிகழ்வு ஒன்றை மீண்டும் குறிப்பிட்ட மதத்தின் மீது சுமத்துவதும், எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன என்று திரும்பத் திரும்ப சிறுபான்மையினரை நோக்கிப் பாடம் எடுப்பதும் இதில் க்ளீஷே காட்சிகளாகத் தென்படுகின்றன. எனினும் சர்ச்சைகளில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள படக்குழுவினர் எடுத்துக் கொண்ட முயற்சிகளாகவே இந்தப் பிரச்னைகள் இதில் இருக்கின்றன. 


தாக்குதலில் ஈடுபட்டு, காவல்துறையால் சுடப்பட்ட தீவிரவாதிக்குத் தலைமை மருத்துவரான கௌஷிக் சிகிச்சை மேற்கொள்ளும் போது எழும் குழப்ப நிலையைப் பார்வையாளர்களிடமே ஒப்படைத்து நழுவியிருக்கிறது படக்குழு. காயம் பட்டவர்களுக்குச் சிகிச்சை செய்வது மருத்துவரின் பணி; அவரது நடத்தையை வைத்து அவரை மதிப்பிடுவது அல்ல என்ற மருத்துவம் சார்ந்த நெறியின் பக்கம் படக்குழுவினர் நின்றிருக்கலாம். 



சில சிக்கல்களைத் தவிர்த்து, `மும்பை டைரீஸ் 26/11’ பரபரப்பான த்ரில்லர் சீரிஸாக வெளிவந்திருக்கிறது. உண்மையான சம்பவம் பற்றிய புனைவுகளில் எந்த தரப்பிலும் நிற்காமல், மும்பை என்ற நகரத்தின் மன உறுதியின் பக்கம் மட்டும் நின்றிருக்கிறது இந்த சீரிஸ். 


`மும்பை டைரீஸ் 26/11’ அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது.