மிசோராமில் தான் மதுகுடிப்பது குறித்து உயரதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்த 2 போலீசாரை சக போலீஸ் அதிகாரி ஒருவரே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மிசோரம் மாநிலத்தில் உள்ள மிசோரம் - அசாம் எல்லையில் அமைந்துள்ள புர்சப் கிராமத்தில் சோதனைச் சாவடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சோதனைச் சாவடியில் பிமல் கண்டி சுக்மா என்ற காவல்துறை அதிகாரி பணியாற்றி வருகிறார். அதுமட்டுமல்லாமல் லால்ரவ்லா மற்றும் இந்திரகுமார் ராய் ஆகிய மேலும் 2 போலீசாரும் இங்கு பணியாற்றி வந்துள்ளனர்.


இதனிடையே பிமல் கண்டிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அவர் பணியின்போது மது அருந்திவிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை சக போலீசார் இருவரும் கண்டித்துள்ளனர். ஏற்கனபே அவர்களுடன் பிமல் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் பிமல் கண்டி தொடர்ச்சியாக குடித்து விட்டு பணிக்கு வரவே, உயரதிகாரிகளிடம் லால்ரவ்லா மற்றும் இந்திரகுமார் ராய் இருவரும் சில தினங்களுக்கு முன் புகாரளித்துள்ளனர். 


இதனால் அதிருப்தியடைந்த பிமல் கண்டி சுக்மா நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில்  லால்ரவ்லா மற்றும் இந்திரகுமார் ராய் இருவரிடமும் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பிமர் துப்பாக்கியை எடுத்து இருவரையும் சரமாரியாக சுட்டார். இதில் போலீசார் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தனர். 


உடனடியாக சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பிமல் கண்டியை உள்ளூர் போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையாக மிசோரம் - அசாம் எல்லையில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.