மகாராஷ்ட்ராவின் தலைநகர் மும்பையில் காவல்துறையினர் சுமார் 100 சிசிடிவி கேமராக்களில் பார்வையிட்டதோடு, சாலையோரத்தில் வாழ்பவர்களைப் போல வேடமிட்டு, கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரைக் கைது செய்துள்ளனர்.


கடந்த ஜனவரி 4 அன்று, மும்பையின் டோங்க்ரி பகுதியில் உள்ள லக்‌ஷ்மண் ஜாதவ் மார்க் என்ற இடத்தில் ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் நபர் ஒருவர் இருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, பாதிக்கப்பட்ட நபரை அருகில் இருந்த ஜே.ஜே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 


அப்பகுதியைச் சேர்ந்த கடைக்காரர்கள், சாலையோரத்தில் வாழ்பவர்கள் ஆகியோரிடம் புகைப்படம் காட்டி விசாரித்ததில், இறந்தவரின் பெயர் அவிந்தர் வீரேந்திர சிங் எனவும், தினக்கூலியான அவர் தினமும் மது குடிக்கும் பழக்கம் கொண்டவர் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 



இறந்தவரின் பிரேத பரிசோதனையில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும், காவல்துறை அதிகாரிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் நூற்றுக்கும் மேலான சிசிடிவி கேமராக்களைப் பார்வையிட்டுள்ளனர். ஜே.ஜே மருத்துவமனை, டோங்க்ரி, வி.பி சாலை முதலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மறைந்த அவிந்தர் வீரேந்திர சிங்குடன் சிவப்பு நிற பேண்ட் அணிந்த நபருடன் பேசிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 


அந்த நபரைத் தேடிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்ததில் அவரது பெயர் ரம்யா என்கிற ஆனந்த நாக்நாத் என்பதும், அவரும் மறைந்த நபரும் மது குடிப்பது தொடர்பான மோதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. ரம்யா மீது சட்டப்பிரிவு 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


`மறைந்த அவிந்தர் வீரேந்திர சிங்குடன் மோதலுக்குப் பிறகு, ரம்யா அப்பகுதியில் இருந்து தலைமறைவாகியுள்ளார் என்பதை முதலில் கண்டுபிடித்தோம். சாலையோர நடைபாதையில் வாழ்பவர்களைப் போல காவல்துறையினர் வேடமிட்டு, காத்திருந்து குற்றவாளியைப் பிடித்தோம்’ என டோங்க்ரி காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் ஷபானா ஷேக் தெரிவித்துள்ளார். 



காவல் ஆய்வாளர் ஷபானா ஷேக்


 


கடந்த ஜனவரி 17 அன்று, ஜே.ஜே மார்க் பகுதியில் உள்ள போஹ்ரி மொஹல்லாவில் காவல்துறையினர் ரம்யாவைக் கண்டுபிடித்துள்ளனர். அவரைப் பிடித்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்ததில், ரம்யாவும், மறைந்த அவிந்தர் வீரேந்திர சிங்கும் மது குடிக்கும் போது தகராறு ஏற்பட்டதாகவும், அதில் கோபத்தில் அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து அவிந்தர் வீரேந்திர சிங்கின் தலையின் தாக்கி விட்டு, ரம்யா தப்பியதாகவும் ஒப்புக் கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


டோங்க்ரி காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் துரித செயல்பாடும், விசாரணையில் மேற்கொள்ளப்பட்ட வித்தியாசமான அணுகுமுறையும் அப்பகுதி மக்களிடமும், அனைவரிடமும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.