ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் மாவட்டத்தில் தன் மனைவியால் தினமும் துன்புறுத்தப்படுவதாக புகார் அளித்து நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் கணவர் ஒருவர். மேலும், தன் மனைவியிடம் கிரிக்கெட் மட்டையால் அவர் அடி வாங்கும் சிசிடிவி வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி உள்ளன. மேலும், அல்வார் மாவட்ட நீதிமன்றத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு, நீதிமன்றம் தரப்பில் பாதிக்கப்பட்ட கணவருக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், நீதிமன்றம் தரப்பில் இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளவும் காவல்துறையினரிடம் உத்தரவு தரப்பட்டுள்ளது. வரும் ஜூன் 7 அன்றுக்குள், இந்த வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு குறித்து பேசியுள்ள அல்வார் மாவட்டத்தின் பிவடி காவல் நிலையத்தின் கூடுதல் கண்காணிப்பாளர் விபின் ஷர்மா, `புகார்தாரர் தன் மனைவியால் தினமும் தாக்கப்படுவதாகக் கூறியுள்ளார். அவரது மனைவியின் வாக்குமூலம் பெறுவதற்காக சம்மன் அனுப்பியுள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.
இந்த வழக்கின் புகார்தாரர் அஜித் சிங் என்ற ஆசிரியர் ஆவார். தினமும் எந்தக் காரணமும் இன்றி தன் மனைவி சுமன் தன்னைத் தாக்குவதாகக் கூறும் இந்தத் தம்பதிக்குக் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தொடக்க காலத்தில் இயல்பாக இருந்த தனது மனைவி கடந்த ஒரு ஆண்டாக தீவிரமாக துன்புறுத்தலில் ஈடுபடுகிறார் எனத் தெரிவித்துள்ளார். இந்தத் தம்பதியினருக்கு 8 வயதில் ஒரு மகனும் உண்டு.
சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், தங்கள் மகன் முன்னிலையில், தன் மனைவி சுமனிடம் கிரிக்கெட் மட்டையில் அஜித் சிங் அடி வாங்குவது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோவை நீதிமன்றத்திலும், காவல்துறையினரிடமும் சமர்ப்பித்துள்ள அஜித் சிங், `நான் என் மகனுக்காக அமைதி காத்து வந்தேன். ஆனால் தற்போது என் மனைவி எல்லையை மீறுகிறார்’ எனத் தெரிவித்துள்ளார். தன் மனைவி மட்டுமின்றி, அவரைத் தனக்கு எதிராக தூண்டுவதாகக் கூறி, தன் மைத்துனர் மீதும் புகார் அளித்துள்ளார் அஜித் சிங்.