கொரோனா ஊரடங்கு காரணத்தால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. அதே சமயம் போக்குவரத்து குறைவால் விபத்துக்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. மருந்துவமனைகளில் எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் மூளை நரம்பியல் தொடர்பான சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது.

 



 

ஆனால் கொலை, கொள்ளை என பல குற்றச்சம்பவங்கள் குறையில்லாமல் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. மதுரையில் தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகரின் பூட்டிய பேக்கரியை அடித்து நொறுக்கிய திமுக பிரமுகரின் ஆதரவாளர்கள் பட்டாக்கத்தியுடன் வலம் வந்து பொருட்களை அடித்து நொறுக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் அ.தி.மு.க பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு சமயம் என்பதால் இந்த பேக்கரி தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீளமான  பட்டா கத்தியுடன் அதிமுக பிரமுகரின் பேக்கரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த வாடிப்பட்டி திமுக இளைஞரணி செயலாளர் அசோக் தனது ஆதரவாளர்களுடன் பேக்கரி முன்பாக போடப்பட்டிருந்த  டேபிள், சேர், கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும் உட்காரும் இரும்பு சேர்களை தூக்கிவீசியும் அட்டகாசம் செய்துள்ளனர். மேலும் வெளியே நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தினர்.

 



 

அதிமுக நிர்வாகியின் கடையின் அருகே உள்ள அரசு வங்கியின் ஜன்னல் கண்ணாடிகளையும் சுக்கு நூறாக அடித்து நொறுக்கினர். அச்சமயம் அந்த வழியாக வந்த நபர்களையும் ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் காவல்துறையினர் வந்துவிடுவார் என உடனடியாக அந்த இடத்தில் இருந்து விரைவாக தப்பியோடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்த பின் விரைந்து சென்று வாடிப்பட்டி காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா  காட்சிகளின் அடிப்படையில்  அராஜகத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர் அசோக் உள்ளிட்ட 5 நபர்களை தேடிவந்த நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

 



 

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தால் திமுக பிரமுகர், அதிமுக பிரமுகருக்கு சொந்தமான கடையை அடித்து நொறுக்கி பின் தப்பியதாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் தேடப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பூட்டிக்கிடந்த பேக்கரியில் பட்டாக்கத்தியால், அடித்து நொறுக்கி சேதப்படுத்திய திமுக பிரமுகரின் செயல், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் முழு விசாரணைக்கு பின்னரே முழு விபரங்கள் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.