அரியலூர் மாவட்டம் செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழ ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்சாமி. மாற்றுத்திறனாளியான இவர் பி.ஏ. வரலாறு பட்டப்படிப்பு முடித்துள்ளார். இந்த நிலையில் இவரிடம் அவருடைய நண்பர் கோவிந்தராஜ் என்பவர் சேலம் மாநகர் செவ்வாய்பேட்டையை சேர்ந்த திமுக பெண் பிரமுகர் வித்யா ராஜ் என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். திமுகவை சேர்ந்த பெண் நிர்வாகி வித்யா ராஜ் தான் துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் என அறிமுகமாகியதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் பணி காலியாக உள்ளது. அதனை தங்களுக்கு வாங்கித் தருகிறேன் என நம்ப வைத்து அதற்காக 4 தவணையாக இரண்டு லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் காலதாமதம் செய்துள்ளார். தொடர்ந்து அரவிந்த்சாமி அந்த திமுக பெண் நிர்வாகிக்கு அழுத்தம் கொடுக்கவே போலியாக ஒரு அரசு அழைப்பானை அனுப்பி வைத்து விட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் மனமுடைந்து போன மாற்றுத்திறனாளி வாலிபர் பல்வேறு பகுதிகளில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர் அரவிந்த்சாமி கூறுகையில், சின்னசேலத்தில் அரசு வேலை உள்ளதாக கூறி நான்கு தவணையாக 2 லட்சம் ரூபாய் வாங்கினார். நீண்ட நாட்கள் ஆகியும் எந்தவித அறிவிப்போம் வராத நிலையில் தான் தொடர்ச்சியாக தொலைபேசியில் அழைத்து கேட்டேன். உடனே பணிக்கான ஆணையை தபால் மூலம் அனுப்பி வைத்தார். அதனை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு சென்று காட்டிய போது அது போலியானது என கூறினர். மேலும், ஒன்றிய அலுவலகத்தில் வேலை இருந்தால் முறையாக அறிவிக்கப்பட்டு அதன்பின் தான் வேலை வழங்கப்படும் என்று கூறினார்கள். தங்களுடைய வீட்டை அடமானம் வைத்து கொடுத்த இந்த பணத்தை எப்படியாவது பெற்றுக் கொடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாற்றுத்திறனாளி அளித்த புகாரின் அடிப்படையில் சேலம் செவ்வாய்பேட்டை காவல்துறையினர் வித்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.