கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 18.34 கோடி ரூபாய் மதிப்புள்ள 35.6 கிலோ வெளிநாட்டுத் தங்கத்தை சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்துள்ளது.


சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) சமீபத்தில் நடத்திய மிகப்பெரிய கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 27-ந் தேதி, தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி வழியாக கடத்திவரப்பட்ட 18.34 கோடி ரூபாய் மதிப்புள்ள 35.6 கிலோ வெளிநாட்டுத் தங்கத்தை பறிமுதல் செய்தது.


சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரகத்துக்குக் கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில், மதுரை-ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் காரில் பயணித்த மூன்று பேரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் காரை சோதனையிட்ட அதிகாரிகள் அவர்கள் காரில் மறைத்து கடத்தி கொண்டு வந்த தங்கத்தை மீட்டு, பறிமுதல் செய்தனர்.


 






முதற்கட்ட விசாரணையில் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


டி.ஆர்.ஐ. என்பது இந்திய அரசின் முதன்மையான கடத்தல் தடுப்பு அமைப்பாகும். டி.ஆர்.ஐ. சென்னை, கடத்தலைத் தடுப்பதில் எப்போதும் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றது. டிஆர்ஐ சென்னை மேற்கொண்ட தீவிர கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளால் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாட்டில் கடல் மார்க்கமாக 105 கிலோவுக்கு மேல் கடத்தப்பட்ட வெளிநாட்டுத் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.