திண்டுக்கல்லில் பிரபல பீடி கம்பெனியின் பெயரில் போலி பீடிகள் தயார் செய்து விற்பனை. ஒரு லட்சம் மதிப்புள்ள பீடி பண்டல்கள் பறிமுதல் இருவர் கைது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி பேட்டை ரோட்டை சேர்ந்தவர்கள் அன்வர் அலி, ஜான்பாண்டியன் இவர்கள் போலி பீடிகள் தயார் செய்து விற்பனை செய்வதாக தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் இன்று 01.08.21 போலீசார் பேட்டை ரோட்டில் உள்ள அன்வர்அலி மற்றும் ஜான்பாண்டியன் வீடுகளில் அதிரடி சோதனை செய்தனர். அப்போது பிரபல கம்பெனிகளின் பெயரில் போலியான லேபிள்களை தயார் செய்து போலியான பீடி மீது ஒட்டி இருப்பது தெரியவந்தது. அது என்னடா போலி பீடி... என போலீசார் அந்த பண்டல்களை பிரித்து பார்த்த போது, அதிர்ந்து போனார்கள். ‛அசல் மலபார்’ என்கிற பிரபல பீடி கம்பெனியின் பெயரில் போலி பீடிகள் தயாரிக்கப்பட்டிருந்தது.
பெயரிலேயே அசல் என வைத்திருக்கும் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, அசலை நகலாக்கி அதே பெயருடன் போலிகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. ஆனால் அந்த போலிகளை தயாரிக்கும் கும்பல், ஒரு வித நியாயத்தை கடைபிடித்திருந்தார்கள். வெறுமனே ஒரு நிறுவனத்தை மட்டும் அவர்கள் பயன்படுத்தவில்லை. அசல் மலபார் போலவே, செய்யது உள்ளிட்ட பிரபல பீடி நிறுவனங்களின் பெயரையும் பயன்படுத்தியிருந்தனர். ஒட்டப்போவது லேபிள்... அதிலென்ன நியாயம், தர்மம் என்கிற சிந்தனையில், பல முன்னணி நிறுவன லேபிள்களை அச்சடித்து, போலி பீடிகளில் அவற்றை ஒட்டி ஜோராக விற்பனை செய்து வந்துள்ளனர்.
அன்வர் அலி மற்றும் ஜான் பாண்டியன் ஆகிய இருவரின் வீடுகளிலிருந்து நான்கு மூட்டைகளில் சுமார் 100 கிலோ எடை கொண்ட பீடி பண்டலங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய மாருதி காரையும் பறிமுதல் செய்தனர். போலி பீடி தயாரித்து விற்பனை செய்ததற்காக இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பிடியின் மதிப்பு ரூ ஒரு லட்சம் என கணிக்கப்பட்டுள்ளது. மாருதி காரில் தென் மாவட்டத்தில் பல பகுதிகளில் தங்களின் போலி பீடிகளை டெலிவரி செய்து வந்துள்ளனர். இதில் விசேசம் என்னவென்றால், அவர்களின் பீடியை போலி என உபயோகிப்பவர் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு நேர்த்தியான தயாரிப்பாக இருந்திருக்கிறது. முறையாக சொல்ல வேண்டுமானால்... இவர்களின் தயாரிப்பை முறையான அனுமதி பெற்று புதிய பிராண்ட் பெயரில் வெளியிட்டிருந்தால் கூட இவர்கள் நிறுவனர்கள் ஆகியிருப்பார்கள். ஆனால், உடனே பணம் ஈட்ட ஆசைப்பட்டு, அடுத்தவர் பிராண்டில் பயணிக்க நினைத்து இன்று பரிதாபமாக சிக்கியிருக்கிறார்கள்.