திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குருக்களையம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). நிதிநிறுவன அதிபரான இவரும், அவரது தாய் சவுந்தரமும் நேற்று முன்தினம் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக்கொலை குறித்து, எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் செல்வராஜின் மனைவி சுபஹாசினி (29), தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரையும், மாமியாரையும் தீர்த்து கட்டியது தெரியவந்தது. 




இது தொடர்பாக சுபஹாசினி, அவரது கள்ளக்காதலனும், உறவினருமான ஒத்தப்பட்டியை சேர்ந்த பால்வியாபாரி கோபிகிருஷ்ணன் (29), அவரது கூட்டாளியான செங்குளத்துப்பட்டியை சேர்ந்த ஆனந்த் (22) ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்தநிலையில் இந்த இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது இந்த கொலையில் பள்ளி மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கூலிக்காக அவர்கள் கொலைகாரர்களாக மாறி இருக்கின்றனர்.




சுபஹாசினிக்கு, கோபிகிருஷ்ணன் சகோதர உறவுமுறை ஆவார். இவர்களுக்கிடையே கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த செல்வராஜ் 2 பேரையும் கண்டித்தார். இதனால் செல்வராஜை தீர்த்துக்கட்ட கோபிகிருஷ்ணன் முடிவு செய்தார். இது தொடர்பாக சுபஹாசினியுடன் அவர் ஆலோசித்தார். கோபிகிருஷ்ணன் தனது நண்பர் ஆனந்துடன் கொலை திட்டம் பற்றி பேசினார். அவர், தனக்கு தெரிந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் இருப்பதாகவும், அவர்களுக்கு ரூ.1½ லட்சம் கொடுத்தால் செல்வராஜை தீர்த்து கட்டி விடுவார்கள் என்றும் கூறினார்.


இதனையடுத்து அந்த பள்ளி மாணவர்கள் மூலம் செல்வராஜை கொலை செய்ய முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை கோபிகிருஷ்ணனிடம் இருந்து ஆனந்த் பெற்று கொண்டார்.  பணத்தை பெற்ற ஆனந்த், சம்பவத்தன்று இரவு கோபிகிருஷ்ணனின் காரில் 2 மாணவர்கள் உள்பட 3 பேருடன் அங்கு வந்தார். ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே காரை நிறுத்தி விட்டு 4 பேரும் நடந்தே செல்வராஜின் தோட்டத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு தூங்கி கொண்டிருந்த செல்வராஜ், சவுந்தரம் ஆகியோரை அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.




இதனையடுத்து கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இதில் பிளஸ்-1 படிக்கிற 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், கத்தி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவான மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர