திண்டுக்கல் பழநி சாலையில் உள்ள முத்தனம்பட்டி அருகே உள்ளது சுரபி நர்சிங் கல்லூரி. இந்த கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது அமமுக கட்சியின் அம்மா பேரவை இணைச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். அவரது கல்லூரி விடுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவிகளுக்கு கல்லூரியின் தாளாளர் சுரபி ஜோதிமுருகன் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.


மேலும் நள்ளிரவில் கல்லூரிக்கு வரும் ஜோதிமுருகன் மாணவிகளை தனது காரில் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள அவரின் மற்றொரு கல்லூரிக்கு கூட்டி செல்வாராம். அங்கிருந்து சுமார் ஒரு மணிவரை மாணவிகளை தன்னுடன் இருக்க வைத்துவிட்டு பாலியல் சீண்டல்களை தொடர்ந்து கொடுத்து வந்ததாகவும், இதற்கு கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனா என்ற பெண்ணும் உதவியாக இருந்து வந்துள்ளதாக மாணவிகள் புகார் கூறியுள்ளனர். 


 




 


 


மேலும் கடந்த 19ந் தேதி தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளிடம் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகின்றன. இதனால் நர்சிங் கல்லூரி மாணவிகள் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திடிரென திண்டுக்கல் முத்தனம்பட்டி சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தகவலறிந்த வந்த தனியார் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை சமசரம் செய்ய முயன்ற போது ஆத்திரமடைந்த மாணவ மாணவிகள் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனை தாக்கினார்கள்.



இந்தநிலையில் பாலியல் சீண்டல்களில் பாதிக்கப்பட்ட மூன்று கல்லூரி மாணவிகள் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் இதில் இரண்டு மாணவிகள் பதினெட்டு வயதுக்கு உட்பட்ட மாணவிகள் இதனால் ஜோதி முருகன் மீது தனிதனியாக இரண்டு போக்சோ சட்டங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மற்றொரு பதினெட்டு வயதுக்கு மேல் உள்ள பெண் கொடுத்த புகாரின் கீழ் காவல்துறையினர் 506/2 கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவும் மற்றும் 15  பிரிவின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டது. அதனைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனாவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் தலைமறைவான சுரபி கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை பிடிக்க  5 தனிப்படை காவல்துறையினர் தேடிவந்தனர். 


 




 


 


இந்நிலையில் தீவிரமாக தேடப்பட்டு வந்தநிலையில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன்  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி வெங்கடேசன் முன்னணியில் ஜோதிமுருகன் சரண்டர் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஜோதிமுருகன் வருகின்ற 26-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்தநிலையில் சுரபி கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனை நீதிமன்ற பாதுகாப்புடன் காவல்துறையினர் வேலூர் மத்திய சிறைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.  அதனைத்தொடர்ந்து தகவல் அறிந்த திண்டுக்கல் தனிப்படை காவல்துறையினர் போளூர் நீதிமன்றத்திற்கு விரைந்து  வந்தனர். இச்சம்பவம் குறித்து தனிப்படை வட்டாரத்தில் தெரிவிக்கையில் தலைமறைவாக உள்ள ஜோதிமுருகனை நாங்கள் கடந்த மூன்று நாட்கள் மேலாக தேடிவருகிறோம் அவரை நாங்கள் கிட்டதிட்ட நெருங்கி விட்டோம். இதனை அறிந்த ஜோதி முருகன் இன்று போளூர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆகிவிட்டார். மேலும் நீதிமன்றம் காவல் முடிந்த பிறகு நாங்கள் எங்களுடைய கஷ்டடியில் எடுக்கவுள்ளோம் என்று தனிப்படை காவல்துறையினர் வட்டாரத்தில் தெரிவித்தார்