தற்போது இருக்கும் நவீன காலகட்டத்தில் அனைத்து விசயங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ளது. அதோடு பண பரிமாற்றம், ஆனலைன் டிக்கெட் முன்பதிவு செய்தல் போன்றவற்றிலும் அதிகம் தொடர்பில் உள்ளது செல்போன். மேலும் ஒவ்வொரு பயன்பாட்டுக்கு ஏற்ப செல்போன் செயலிகள் உள்ளன.
இதற்கிடையே நமது தேவகைளை அறிந்து சிலர் நமக்கு தெரியாமலே நம்மை பற்றி அறிந்து செல்போன் மூலம் கடனுதவி வழங்குவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடன் செயலிகள் மூலம் கடன் கொடுப்பவரின் முகத்தை பார்க்காமல், எந்த இடத்தில் இருந்தும் கடன் பெற்று கொள்ளலாம். இதனால் பலரும் கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து கடன் பெறுகின்றனர். ஆனால் செயலி மூலம் கடன் பெற்றவர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு வாலிபருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென ரூ.3 ஆயிரம் தேவைப்பட்டது. பிறரிடம் கடன் கேட்க தயங்கிய அவர், கடன் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்தார்.
மேலும் செயலியில் கேட்கப்பட்ட விவரங்கள், புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றினார். இதையடுத்து கடன் தொகையாக அவருடைய வங்கி கணக்கில் ரூ.3 ஆயிரம் வந்தது. அதை எடுத்து செலவு செய்தார். அதை தொடர்ந்து பணம் கிடைத்ததும், அந்த செயலியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தி விட்டார். ஆனால் கடனை செலுத்தவில்லை என்றும், பணத்தை உடனே செலுத்த வேண்டும் என்று ஒருவர் செல்போனில் பேசி வாலிபரை மிரட்டினார்.
இதனால் பயந்து போன அவர் மீண்டும் பணம் செலுத்தினார். இதோடு நிற்காத அந்த மோசடி நபர், அடுத்தடுத்து வாலிபர் கடன் வாங்காத வேறு சில செயலிகளின் பெயரை கூறி அதற்கும் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். மேலும் பணம் தராவிட்டால் வாலிபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவருடைய நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்புவோம் என்று மர்ம நபர் மிரட்டினார். இதனால் வாலிபர் பலரிடம் கடன் வாங்கி ரூ.20 லட்சம் வரை செலுத்தினார்.
அதன்பின்னர் வேறு செயலிக்கு பணம் கேட்டு மிரட்டப்பட்டார். இறுதியில் வேறுவழியின்றி திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் வாலிபர் புகார் அளித்தார். ரூ.3 ஆயிரம் கடனுக்கு, ரூ.20 லட்சம் வசூலித்த மோசடி நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்த உடனே செல்போனில் இருக்கும் தகவல்களை மோசடி நபர்கள் தெரிந்து கொள்கின்றனர். இதனால் நண்பர்கள், உறவினர்களுக்கு ஆபாச படத்தை அனுப்புவோம் என்று மிரட்டி பணம் பறிக்கின்றனர். இதுபோன்று தினமும் சைபர் கிரைம் காவல் பிரிவுக்கு புகார்கள் வருகின்றன. எனவே கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து கடன் பெறுவதை மக்கள் தவிர்க்க வேண்டும், என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்