திண்டுக்கல் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியின் கணவரை படுகொலை செய்த வழக்கில் சிறுவன் உள்பட ஆறு பேரை திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்தனர்.


முன்விரோதம்


திண்டுக்கல் அருகே உள்ள அடியனூத்து ஊராட்சி தலைவியாக இருந்து வந்தவர் நிர்மலா. இவரது கணவர் மாயாண்டி ஜோசப்(60). இதற்கிடையே நிர்மலா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தற்பொழுது மாயாண்டி ஜோசப் திமுக கட்சி பிரமுகராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மாயாண்டி ஜோசப் தான் நடத்தி வரும் மதுபான கூடத்தில் இருந்து மது பாட்டில்களை மற்றொரு இடத்தில் வைத்து (சீல்லிங்) விற்பனை செய்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் முன்னாள் வைத்துக்கொண்டு யாகப்பன்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.




கொலை சம்பவம்


அப்பொழுது அதே சாலையில் எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மாயாண்டி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளனர். அப்பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்த மாயாண்டி ஜோசப்பினை சுற்றி வளைத்த ஆறு பேர் அடங்கிய கும்பல் அவரது தலை மற்றும் முகத்தை கொடூரமாக சிதைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பு விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாயாண்டி ஜோசப்பின் உடலை மீட்டு உடல் கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




சிறுவன் உட்பட 6 பேர் கைது


மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே திண்டுக்கல் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தாலுகா போலீசார் அவ்வழியே வந்த சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் மாயாண்டி ஜோசப்பினை கொலை செய்த யாகப்பன்பட்டி பகுதியை சேர்ந்த மாயாண்டி ஜோசப் பின் உறவினர் ஆரோக்கியம் என்பவரது மகன் டேனியல் ராஜா(20), ஞானபிரகாசம் மகன் அலெக்ஸ் பிரிட்டோ(20),  பார்வையற்றோர் காலனி பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் தமிழ்செல்வன்(18),  செல்வராஜ் மகன் காளீஸ்வரன்(20), மணிகண்டன் மகன் பிரவீன் குமார்(19)  மற்றும்15 வயது சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்தனர்.




கொலைக்கான காரணம்


போலீசாரின் விசாரணையில், மாயாண்டி ஜோசப் குடும்பத்திற்கும் அவரது உறவினர் ஆரோக்கியம் என்பவரது குடும்பத்திற்கும் அதே பகுதியில் உள்ள நிலம் மற்றும் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் தேடி வருவதாக கூறியுள்ளனர்.  இது தொடர்பாக ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.