திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கீழதிப்பம்பட்டியை சேர்ந்தவர் அகில்ராஜ். அவருடைய மனைவி பாண்டீஸ்வரி (வயது 27). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அகில்ராஜை பிரிந்து, பாண்டீஸ்வரி மட்டும் திண்டுக்கல்லில் தனியாக வசித்து வந்தார். அவருடைய 2 குழந்தைகளும் அகில்ராஜுடம் வசிக்கின்றனர். தாடிக்கொம்பு அருகே உள்ள சேடப்பட்டியை சேர்ந்தவர் கவுஸ்பாண்டி (25). கவுஸ்பாண்டி, வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தொழில் செய்து வருகிறார். தனது தொழில் விஷயமாக இவர் அடிக்கடி திண்டுக்கல்லுக்கு வந்து சென்றார்.
அப்போது பாண்டீஸ்வரியை சந்தித்து பேசும் வாய்ப்பு கவுஸ்பாண்டிக்கு கிடைத்தது. இதில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தன்னுடன் தொடர்பில் உள்ள கவுஸ்பாண்டியை மிரட்டி பணம் பறிக்க பாண்டீஸ்வரி திட்டமிட்டதாக தெரிகிறது. அதன்படி தனக்கு ரூ.10 லட்சம் தருமாறு அடிக்கடி கேட்டு பாண்டீஸ்வரி அவரை மிரட்டினார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கவுஸ்பாண்டி, பாண்டீஸ்வரியை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக சேடபட்டிக்கு வரும்படி பாண்டீஸ்வரியை கவுஸ்பாண்டி அழைத்தார். அவரின் அழைப்பை ஏற்று பாண்டீஸ்வரி இரவில் சுக்காம்பட்டிக்கு பேருந்தில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து பாண்டீஸ்வரியை, சேடப்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் கவுஸ்பாண்டி அழைத்து சென்றார். சேடப்பட்டி செல்லும் வழியில் உள்ள காட்டுப்பகுதியில் அவர்கள் 2 பேரும் நெருங்கி இருந்ததாக தெரிகிறது.
பின்னர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென பாண்டீஸ்வரியை சரமாரியாக கவுஸ்பாண்டி வெட்டினார். அவருடைய கழுத்து, கை மற்றும் முகத்தில் வெட்டு விழுந்தது. இதில் நிலைகுலைந்து போன பாண்டீஸ்வரி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே பாண்டீஸ்வரியின் உடலை, தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த சாக்குப்பையில் போட்டு கட்டினார். பின்னர் நள்ளிரவில், பாண்டீஸ்வரி உடலுடன் கூடிய சாக்குமூட்டையை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு தாடிக்கொம்பு இடையகோட்டை சாலையில் கவுஸ்பாண்டி சென்றார். பூலாங்குளம் அருகே, சாலையோரத்தில் அந்த சாக்குமூட்டையை வீசி சென்று விட்டார். பாண்டீஸ்வரியை கொலை செய்த கவுஸ்பாண்டி செய்வதறியாது திகைத்தார். போலீசார் விசாரணை நடத்தி தன்னை எப்படியும் கைது செய்து விடுவார்கள் என்று அவர் கருதினார். இதனால் அவர், போலீசில் சரண் அடைய முடிவு செய்தார்.
இவ்வளவு நாள் அவருடன், நான் பழகியதற்காக ரூ.10 லட்சம் கேட்டு அவர் என்னை மிரட்டினார். இதனால் அவரை காட்டுப்பகுதிக்கு அழைத்து அரிவாளால் வெட்டிக்கொன்றேன். பின்னர் உடலை மறைப்பதற்காக சாக்குமூட்டையில் கட்டி சாலையோரத்தில் வீசி சென்று விட்டேன். எப்படியும் போலீசார் என்னை கைது செய்து விடுவார்கள் என்று கருதி போலீசில் சரண் அடைந்தேன் என்று வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கள்ளக்காதலனால் பெண் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்