உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் போராட்டத்தின் முன்னணி தலைவரான தில்பாக் சிங் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் தில்பாக் சிங் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மத்திய அரசின் விவசாயச் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தில்பாக் சிங் முன்னணியில் இந்தப் போராட்டத்தை வழிநடத்தினார். இந்நிலையில் நேற்று அலிகஞ்ச் பகுதியில் இருந்து தனது வீட்டிற்குத் திரும்பி வந்த போது தில்பாக் சிங்கின் வாகனத்தின் மீது மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 






இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவரது கார் சம்பவ இடத்திலேயே பஞ்சர் ஆகியுள்ளது. அதனைத் தொடர்ந்து காருக்குள் நுழைய முயன்ற இருவராலும், அவ்வாறு நுழைய முடியாததால் ஓட்டுநரின் இருக்கையை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ஓடினர். வழக்குப் பதிவின் முதல் தகவல் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 



கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் லக்கிம்பூர் கேரியில் பாஜக அமைச்சரின் மகனின் கார்கள் 8 விவசாயிகள் மீது ஏற்றிக் கொன்ற வழக்கில் முக்கிய சாட்சியமாக இருப்பவர் தில்பாக் சிங் என்பதால் அந்தக் கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. 


இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `லக்கிம்பூர் கேரி துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குரலாக இருப்பவரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்? யாருடைய பாதுகாப்பின் கீழ் இவர்கள் பணியாற்றுகிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.