தருமபுரி நகரில் உள்ள ஒரு ஜவுளி கடையின் மேற்கூரை உடைத்து, திரைப்பட பாணியில் ரூ.15 இலட்சம் திருடி சென்ற 2 பேரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ 13.93 இலட்சம் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தருமபுரி நேதாஜி பை-பாஸ் சாலையில் உள்ள பிரபலமான பிக்பாஸ் என்ற ஜவுளி கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் பொங்கல் பண்டிகையொட்டி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் துணிகளை வாங்கி சென்றனர். இந்த கடையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியை சேர்ந்த ரியாஷ் அகமது (39) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 17-ந் தேதி பொங்கல் பண்டிகையொட்டி ஜவுளி கடையில் நடைபெற்ற வியாபாரத்தில் வசூலான ரூ.14,66,500 பணத்தை, பணப்பெட்டியில் வைத்துவிட்டு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மேலாளர் ரியாஷ்அகமது 18 ந் தேதி கடையை வழக்கம் போல் திறந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்து கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டியில் இருந்த ரூ.14,66,500 மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கடையில் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டனர். தொடர்ந்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். அதில் திருடன் பணப் பெட்டி பக்கம் செல்லாமல், பணம் வைத்திருந்த துணி மூட்டைகள் பக்கம் சென்று, பணம் எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. இதனால் கடையில் வேலை பார்த்தவர்களுக்கு தொடர்பு இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். அப்பொழுது கடையில் வேலை செய்தவர்கள், வேலை செய்துவிட்ட நின்றவர்கள் விவரத்தை சேகரித்து, காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பொழுது பிடமனேரி பகுதியை சேர்ந்த பாரத்குமார் (20) என்பவர் தீபாவளி பண்டிகை நேரத்தில் கடையில் வேலை பார்த்துவிட்டு, நின்று விட்டது தெரியவந்தது. தொடர்ந்து பரத்குமாரை தருமபுரி நகர காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் பரத் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்பொழுது தானும், உறவினர் மோகன் குமார் (21) என்பவரும் கொள்ளையடித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து மோகன் குமாரை பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்துள்ளனர். அப்பொழுது பரத் துணிக்கடையில், வேலை செய்ததால், கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால், தன்னிடம் பணம் இருக்கும் இடத்தை தெரிவித்து, கொள்ளையடிக்க திட்டம் போட்டு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் திரைப்பட பாணியில், தலையில் ஒளிரும் விளக்குகள் வைத்துக் கொண்டு பணத்தை கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பரத்குமார் மற்றும் மோகன்குமார் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து கொள்ளையடித்த பணம் ரூ.13.93 இலட்சம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கல்லூரி படிக்கும் இளைஞர் திரைப்பட பாணியில் கொள்ளையடித்து பணத்தில், பொங்கலுக்கு புத்தாடை வீட்டு உபயோக பொருள் வாங்கி கொண்டு சந்தோஷமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.