தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பூதனஅள்ளி வனப்பகுதியை ஒட்டியுள்ள பழைய கல்குவாரி பகுதியில் கடந்த 19ந் தேதி 2 ஆண் சடலம் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் அதியம்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வன் மற்றும் அதியமான்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அங்கிருந்த சொகுசு கார் ஒன்றை பறிமுதல் செய்தனர். இதில் ஒருவரின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததால், தொடர்ந்து சம்பவ இடத்திற்கு, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பைரவா வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சடலமாக கிடந்தவர்கள் கேராளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சிவக்குமார் பாய், நிவில்ஜார்ஜ் குருஸ் என்பது தெரியவந்தது.

 



 

இந்த இரட்டை கொலை வழக்கில் தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து, செல்போன் தொடர்புகள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்தும், செல்போன் சிக்னல்களை கொண்டும், கொலையுன்டவர்களின் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்டமாக இருடியம் மோசடி விவாகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என தகவல் வெளியானது. மேலும் சந்தேகத்தின் பேரில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் மற்றும் லட்சுமணன் எ அபு ஆகிய இருவரை பிடித்து அதியமான்கோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

 


 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த ரகு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜோசப், சுரேன்பாபு, விஸ்னுவர்மன் ஆகிய 4 பேரும் நேற்று தென்காசி மாவட்டம் செங்கோட்டை உரிமையியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த நிலையில், நீதிமன்றத்தில் சரணடைந்த 4 மற்றும் அதகயமான்கோட்டை காவல் துறையினர் கைது 2 உள்ளிட்ட 6 பேரையும், தருமபுரி மாவட்ட காவல் துறையினர், தருமபுரி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இந்த இரட்டை கொலை வழக்கு சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வருவதால், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் அவர்களும் கைது செய்யபடுவார்கள், மேலும் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.