தருமபுரி அடுத்த குண்டல்பட்டியில் கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ்சாலை அருகே பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில்  மருந்தகம், அக்ரோசர்வீஸ் மற்றும் இ-சேவை மையம் உள்ளிட்ட கடைகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இன்று காலை அருகருகே இருந்த மூன்று கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மதிகோன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கடைகளில் நுழைந்து ஆய்வு செய்தனர். இதனையடுத்து அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.



 

அதில் நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 30 வயதுடைய இளைஞர் முகத்தை மூடியவாறு இருசக்கர வாகனத்தில் வந்து, இரும்பு கம்பியால், தொடர்ச்சியாக இருந்த 5 கடைகளில் 3 கடைகளின் பூட்டை உடைத்துள்ளார். இந்த பூட்டை உடைக்கும் பொழுது ஒவ்வொரு கடையும் பூட்டு அருகே சென்று அமைதியாக உட்கார்ந்து அக்கம் பக்கம் யாரேனும் வருகிறார்களா நம்மை நாட்டமிடுகிறார்களா என்பதை பொறுமையாக திரும்பி திரும்பி பார்த்து ஒவ்வொரு கடையின் சட்டரின் பூட்டை உடைத்துள்ளார். தொடர்ந்து மெல்ல கடைகளில் ஷட்டர் தூக்கிவிட்டு கடைகளுக்குள் சென்று  பணத்தை திருடி செல்வது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால் மூன்று கடைகளின் பூட்டை உடைத்து பெரிய அளவிலான பணத்தை கொள்ளை அடிக்கலாம் என திட்டமிட்டு உள்ளே சென்ற கொள்ளையனுக்கு ஒவ்வொரு கடைகளிலும் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.  மூன்று கடைகளிலும் ஒரு கடை மருந்தகம் மற்றொன்று இ சேவை மையம் இன்னொன்று அக்ரோ சர்வீஸ் என்பதால் இதில் பெரிய அளவில் பணம் கிடைக்கவில்லை. இந்த மூன்று கடைகளில் பெரியளவில் பணம் இல்லாமல், ரூ.10,000 மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் வந்தவரை இலாபம் என நினைத்து கொண்டு  திருடிச் சென்றுள்ளார்.



 

மேலும் இந்த காட்சிகளை வைத்து மதிகோண்பாளையம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தருமபுரி - சேலம் பிரதான தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து அதிகம் உள்ள பரபரப்பான இடத்தில் தொடர்ந்து மூன்று கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக தருமபுரி நகர காவல் நிலையம் மற்றும் மதிகோண்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.