தருமபுரி நெசவாளர் காலனியைச் சேர்ந்த கவியரசன் (19) என்ற இளைஞர் பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இதேபோல், தருமபுரி நரசங்குளம் பகுதியைச் சேர்ந்த சிவகுரு என்பவரும் படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் சிவகுரு என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதே பெண்ணை  கவியரசும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்த இரண்டு இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் நாளடைவில் இருவருக்கும் முன்விரோதம் தொடர்ந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் இன்று காலை கவியரசன் என்பவர் இலக்கியம்பட்டி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிவகுருவும், அவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து, கவியரசனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது வாக்குவாதம் முற்றி  ஆத்திரமடைந்த சிவகுருவும், அவரது நண்பர்களும் சேர்ந்து கவியரசனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அச்சமடைந்து வலி தாங்காத கவியரசன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். அப்பொழுது சிவகுரு துரத்தி சென்று போய், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கவியரசனை சரமாரியாக குத்தினார். இதில் கை உள்ளிட்ட இடங்களில் வெட்டுப்பட்டு காயமடைந்த, கவியரசன் ரத்த வெள்ளத்தில் சாலையிலேயே துடிதுடித்து வலியால் அலறினார். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் வருவதை பார்த்த சிவகுருவும், அவரது 2 நண்பர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனைக் கண்ட காவல் துறையினர் கவியரசனை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிர  அவசர சிகிச்சை பிரிவில் கவியரசன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து தருமபுரி நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கவியரசு கத்தியால் தாக்கிய மூவரும் தப்பி ஓடியுள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவான மூவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

போக்குவரத்து அதிகமுள்ள எப்பொழுதும் பரபரப்பாக, மக்கள் நடமாட்டம்  தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி பகுதியில் காதல் விவகாரத்தில் நடந்த தகராறில் பட்டப்பகலில் இளைஞரை ஓட, ஓட விரட்டி 3 பேர் கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.