தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த அண்ணாமலைப்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர்  கிருஷ்ணகிரியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இதேப்போல்  சென்னையன், மதுபாலாஜி,  ஆகியோர் சென்னையில் குடும்பத்துடன் தங்கி ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையன், வெங்கடேசன், மதுபாலாஜி ஆகிய, மூன்று பேரின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்ட கிராம மக்கள், கம்பைநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கம்பைநல்லூர் காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டனர்.

 



 

இதில் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆட்கள் இல்லாத வீடுகளில் நுழைந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தொடர்ந்து மூன்று வீடுகளில் திருடு போனதால், தருமபுரியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர். இதில் வெங்கடேசன் தனது வீட்டினுள் சென்று பார்த்தபோது, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள்,  மூன்று-பவுன் தங்க நகை மற்றும், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, மூன்று-பட்டு புடவைகள் திருட்டு போனது தெரியவந்தது. மேலும் சென்னையன் மற்றும் மதுபாலாஜி  சென்னையிலிருந்து வந்த பின்பே, அவர்களது வீட்டில் திருடு போன பொருட்கள் விவரம் தெரிய வரும் என காவல் துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து ஒரே கிராமத்தில், அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவத்தால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்

 



தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிபொழிவு வாகன ஒட்டிகள் அவதி. 

 

தமிழ் மாதத்தில் கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்து மாசி மாதம் வரை நான்கு மாதங்கள் பனி பொழிவு அதிகமாக காணப்படும். ஆனால் கார்த்திகை மாதம் தொடங்கி ஒரு வாரமாகியும் பனி வரவில்லை. வடகிழக்கு பருவமழையால் தொடர் மழை பெய்து வந்தது. கடந்த வாரம் வரை தொடர் மழை இருந்து வந்தது. தற்போது, கடந்த இரண்டு நாட்களாக மழை பொழியவில்லை.

 


 

தொடர்ந்து மழை நின்றதால் பனி பொழிய தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி, அரூர் நகரம், மொரப்பூர், பெத்தூர், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், நெருப்பாண்டகுப்பம், அக்ராகரம், எட்டிப்ட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும்  பனிபொழிவுகள் ஏற்பட்டது. அதிகாலை போலவே காலை 8 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை.  இன்று காலை  சாலையில் எதிரே வரும் ஆட்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிந்தவாறு சென்றன. இந்த கடும் பனி மூட்டம் காரணமாக  வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.