தருமபுரி நகரில் உள்ள ஜவுளி கடையின் மேற்கூரை உடைத்து 15 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி நேதாஜி பை-பாஸ் சாலையில் உள்ள பிரபலமான பிக்பாஸ் என்ற ஜவுளி கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் பொங்கல் பண்டிகையொட்டி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் துணிகளை வாங்கி சென்றனர். இந்த கடையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியை சேர்ந்த ரியாஷ் அகமது (39) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 17-ந் தேதி பொங்கல் பண்டிகையொட்டி ஜவுளி கடையில் நடைபெற்ற வியாபாரத்தில் வசூலான ரூ.14,66,500 பணத்தை, பணப்பெட்டியில் வைத்துவிட்டு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மேலாளர் ரியாஷ்அகமது 18 ந் தேதி கடையை வழக்கம் போல் திறந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டியில் இருந்த ரூ.14,66,500 மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கடையில் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டனர். தொடர்ந்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கடையில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதற்காக மர்ம நபர் கடையை நோட்டமிட்டு மேற்கூரை உடைத்து உள்ளே புகுந்து திருடி சென்றுள்ளார்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஜவுளி கடையின் மேற்கூரை உடைத்து பணத்தை கொள்யைடித்தவர் பழைய குற்றவாளிகளா? அல்லது கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் யாராவது திருடி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடைகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா வைத்தும், கடையின் மேற்கூரை உடைத்து மர்ம நபர் பணத்தை திருடி சென்ற சம்பவம் நகர பகுதியில் உள்ள வியாபாரிகள் இடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் துணி கடையில் மேற்கூரை உடைத்து கொள்ளையடித்து சென்றது, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், தற்போது சமூக வலை தளங்களில் பரவி வைரலாகி வருவதால் பொது மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.