தருமபுரி அருகே இளம்பெண் இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி,  உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காவல் துறையினரை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 


தருமபுரி அடுத்த ஜருகு அடுத்த ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கும், மருக்காலம்பட்டியை சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  சுந்தரமூர்த்திக்கு இது 2வது திருமணம் என்பதால், கணவன் மனைவி இருவருக்கும் வரதட்சணை சம்மந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

 

இந்நிலையில் இவர்களுக்கு 4 வயது மற்றும் 2 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் பிரியங்காவின் கணவன் சுந்தரமூர்த்தி, பிரியங்காவின் பெற்றோருக்கு அடிக்கடி போன் செய்து பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் பிரியங்காவின் பெற்றோர் சுமார் 15 இலட்சம் வரை கொடுத்துள்ளனர். ஆனால் மீண்டும் தொடர்ந்து பிரியங்காவிடம் உன்னுடைய பெற்றோரிடம் பணம் வாங்கி வா என அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.



 

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணம் கேட்டதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரியங்காவின் தாயாருக்கு சுந்தரமூர்த்தி போன் செய்து உங்களுடைய மகள் வீட்டில் மயக்கமடைந்து விட்டதாகவும், உடனே வர வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரியங்காவின் பெற்றோர் சுந்தரமூர்த்தியின் வீட்டிற்கு வந்து பார்த்த போது உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிந்தது. அதனையடுத்து பிரியங்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொப்பூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது மகளை சுந்தரமூர்த்தி அடித்து கொலை செய்து விட்டதாகவும், அவரது இறப்பிற்கு காரணமான சுந்தரமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என கூறி, உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்தனர்.

 

இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வந்த காவல் துறையினரை மருத்துவமனை வளாகத்தில், முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுந்தரமூர்த்தியை விசாரணைக்கு அழைத்து வந்துள்ளதாகவும், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பெற்றோர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, உடலை பெற்றுக் கொள்வதாக உறுதியளித்தனர். இதனால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.