தருமபுரி அருகே இரண்டாவது காதலை கைவிட சொன்ன, முதல் காதலனை அடித்து கொலை செய்து சாலையோரம் வீசிய, பெண் மற்றும் இரண்டாவது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி அடுத்த சவுளூர் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கடந்த 9ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது. இந்த தகவலை அறிந்த தருமபுரி நகர காவல் துறையினர் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் இறந்து கிடந்தவர் பூகனஹள்ளியை சேர்ந்த மாது(45) என்பது தெரியவந்தது. மாது கடந்த 10 ஆண்டுகளாக தருமபுரியில் உள்ள மைக் செட் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்துள்ளார். அப்பொழுது மாதுக்கும், சத்யா நகரை சேர்ந்த தனியார் பள்ளி சமையலராக பணியாற்றி வந்த சித்ரா(40) என்பவருக்கும் காதல் இருந்து வந்ததுள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சித்ராவுக்கும், அவர் பணியாற்றி வரும் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியில் சேர்ந்த கொட்டாவூரை சேர்ந்த கிருஷ்ணன்(41) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இது முதல் காதலன் மாதுவுக்கு தெரிந்துள்ளது. இதனால், சித்ராவுக்கும், மாதுவுக்கும் தகராறு ஏற்பட்டு, ஓட்டுநருடன் உள்ள காதலை கைவிடுமாறு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கிருஷ்ணனிடம், சித்ரா பிரச்சினையை தெரிவித்துள்ளார். அப்பொழுது சித்ராவும், இரண்டாவது காதலன் கிருஷ்ணனும், மாதுவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த, 9ஆம் தேதி இரவு வழக்கம் போல் மாது, சித்ராவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது சித்ரா, கிருஷ்ணனை தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளார். கிருஷ்ணன் பள்ளிக்கு சென்று, பேருந்தில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து, சட்டைக்குள் முதுகில் மறைத்து வைத்துக் கொண்டு சித்ராவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது கிருஷ்ணன், இரும்பு கம்பியால் மாதுவின் பின் பக்க தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாது, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையைடுத்து மாதுவின் உடலை சித்ராவின் இருசக்கர வாகனத்தில் வைத்து, இருவரும் எடுத்து சென்று, தருமபுரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சவுளூர் மேம்பாலம் அருகே வீசி விட்டு சென்றது, காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சித்ரா, கிருஷ்ணன் இருவரையும் தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு கம்பி, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தருமபுரி அருகே இரண்டாவது காதலை கைவிட சொன்ன, முதல் காதலனை அடித்து கொலை செய்து, சாலையோரம் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்