தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஸ் . அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த  சங்கீதா (19) என்பவருக்கும், கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு தற்போது 11 மாத கைக் குழந்தை உள்ளது. இந்நிலையில்  சதீஷ் அவரது மனைவி சங்கீதா  இருவரும் திருப்பூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். மேலும் பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சின்னப்பபையன்(20), என்பவரும் திருப்பூரில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் சின்னபையனும், சதீஸ்சும் பக்கத்து, பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சதீஸ் சின்னப்பையன் இருவரும் அறிமுகமாகி நட்புடன் பழகி வந்துள்ளனர். இதில் சதீஸ், சின்னப்பயைனை அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்பொழுது நாளடைவில்   சின்னபையனுக்கும் சதீஸ் மனைவி சங்கீதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பழக்கம், தகாத உறவுக்கு வழி வகுத்தது. நண்பர் இல்லாத சமயத்தில், வீட்டிற்கு வந்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். 



ஒரு கட்டத்தில் இந்த விவரம், சதீஸிற்கு தெரியவருகிறது. தகாத உறவை கைவிடுமாறு மனைவிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் சதீஷ். ஆனாலும் மனைவி சங்கீதா அதை பொருட்படுத்தாமல் தகாத உறவை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், சங்கீதாவை அவரது சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார் சதீஷ். அங்கு தனது 11 மாத கைக்குழந்தையை வீட்டில் விட்டு விட்டு, கடந்த மே 3 ம் தேதி சின்னப் பையனுடன் தலைமறைவானார் சங்கீதா. நண்பனுடன் மனைவி மாயமான நிலையில், அது குறித்து காவல்நிலையத்தில் சதீஷ் புகார் அளித்தார். அதன் பேரில் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் துறையினர்  சின்னபையன் மற்றும் சங்கீதா இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். காவல் நிலையத்தில் வந்து ஆஜராகுமாறு அறிவுறுத்தினர். 

 



இதனையடுத்து, சின்னபையன் மற்றும் சங்கீதாவும் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றனர். அப்போது இருவரும் காவல் நிலையம் நுழைவு வாயிலில் திடீரென மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த பெண் காவலர்கள் உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது, இருவரும் விஷம் குடித்தது தெரியவந்தது.  பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னபையனும், சங்கீதாவும் உயிரிழந்தனர். இது குறித்து  பென்னாகரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கள்ளக் காதல் ஜோடி விஷம் அருந்திவிட்டு காவல் நிலையம் முன்பு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.